
பணிந்து போகும் குணத்தைக் கொண்டவர்களை யாரும் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பணிந்து போகும் குணத்தைக் கொண்டவன் 'இப்படித்தான் நடக்க வேண்டும்' என்று யாருக்கும் உத்தரவுபோட தைரியம் இல்லாதவனாக இருப்பான்.
'நாம் பணிந்து போனால் மற்றவர்கள் நம்மை விரும்பி நமக்கு உதவி செய்ய ஓடோடி வருவார்கள். நம்மை ஆசையுடன் வரவேற்று மதிப்புடன் நடத்துவார்கள் என்று சிலர் தவறுதலாக நினைத்துக் கொண்டு அப்படி செயல்பட்டு வருகிறார்கள்.
இத்தகைய குணத்தைக் கொண்டவர்களை நம்பி அதிகாரங்கள் நிறைந்த உயர் பதவியைக் கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள். தங்களுடைய நிறுவனத்திற்கு இலாபம் சம்பாதித்து கொடுக்கும் ஆற்றல் இப்படிப்பட்டவர்களிடம் இருக்காது.
முன்னேற்றம் தரும் புதிய வழிமுறைகளை உருவாக்கும் திறமை இவர்களிடம் இருக்காது. மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த தவறான காரியங்களையும் இவர்கள் செய்யத் தயாராயிருப்பார்கள்.
உங்களுடைய வாழ்கை இலட்சியம் என்று எதையும் இவர்கள் ஏற்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுடைய இலட்சியங்களைச் செய்து முடிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் கூட போய்ச்சேர்ந்து விடுவதினால் இவர்கள் இல்லாமையால் அவதிப்பட்டுக் கொண்டு அவலமாக வாழ்ந்து வருவார்கள்.
உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்.
நீங்கள் செய்யத் தவறினால் உங்களுக்கு செல்வம், உயர் பதவி, செல்வாக்கு, புகழ் போன்றவைகள் கிடைக்காமல் போய்விடும்.
உங்களுடைய திறமையை மற்றவர்கள் கண்டறிந்து உங்களுக்கு உயர்ந்த பதவி கொடுக்கப்போகிறார்கள் என்று காத்திருந்தால் நீங்கள் ஏமாறத்தான் வேண்டியிருக்கும்.
உங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கும் அதிகாரம் கொண்டவர்களிடம் உங்களால் பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படமுடியும் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொள்ளுங்கள்.
நன்கு யோசித்து உங்கள் அலுவலகமோ அல்லது தொழிற்சாலையோ இன்னும் சிறந்த முறையில் செயலாற்றி வருவதற்கு நல்ல யோசனைகளை உங்கள் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். இதற்கு பணிவோ, பயமோ தேவையில்லை.
எதற்கும் பயப்பட வேண்டுமோ அதற்குத்தான் பணிந்து நடக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பணிந்து போகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒருவன் துணிச்சல் அற்றவனாகத்தான் இருப்பான். எப்போதும் பிறர் தயவை எதிர்பார்த்து வாழக்கூடியவனாகவும் இருப்பான். இவர்களைச் சார்ந்தவர்களும் முன்னேற முடியாது. இத்தகையோர் எப்படி வாழ்ககையில் சாதனை படைக்க முடியும்?
சோவியத்து நாட்டில் ஒரு பழமொழி உண்டு அதாவது வழக்கத்தால் விளையும் கேடுபற்றி 'நொண்டியுடன் நீ ஒரு வருடம் நடந்தால் வருட முடிவில் தீயும் நொண்டியாவாய்' என்று. எனவே, பணிந்து போகும் பழக்கமும் வேண்டாம், பணிந்து போவோரின் தொடர்பும் வேண்டாம்.