
பிறர் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக எந்தவொரு செயலையும் செய்வதால் பயனில்லை அதனால் கிடைக்கும் புகழ் நிலையற்றதாகவே அமையும்.
புகழ் உங்கள் அறிவால், திறமையால் புத்திசாதுர்யத்தால், தானாகவே கிடைப்பதாக இருக்க வேண்டும். அது எப்போது கிடைக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
சிலர் என்ன செய்வார்கள் என்றால் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இரவும் பகலும் தங்கள் பணியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அதற்காக தங்கள் உதிரம், வியர்வை என்று அனைத்தையும் சிந்துவார்கள். சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கழிந்தும், 'ஜால்ரா' போடும் கூட்டம் மட்டுமே மேலிடத்தால் அங்கீகரிக்கப் படுவதாகவும், தன்னைப் போன்ற உண்மையான உழைப்பாளிக்கு மதிப்பும், மரியாதையும் இல்லை என்றும் சலித்துப் போய் புலம்பத் தொடங்கி விடுவார்கள்.
தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த எருமை மாடு ஒன்றின் கொம்பில் ஒரு கொசு வந்தமர்ந்தது. சிறிது நேரம் அதிலேயே அமர்ந்திருந்த கொசு, பின்னர் அங்கிருந்து செல்ல விரும்பியது. 'எதற்கும் இத்தனை நேரம் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதற்காக இடம்கொடுத்த இந்த எருமை மாட்டிடம் விடைபெற்றுச் செல்வதே பண்பான செயல்' என்று கருதியது கொசு.
அப்படியே எருமையிடம், "இத்தனை நேரம் இளைப்பாற இடம் கொடுத்த எருமையே, உனக்கு ரொம்ப நன்றி. இப்போது நான் இங்கிருந்து போக ஆசைப்படுகிறேன். உனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையே?” என்று பாந்தமாகக் கேட்டது.
இதைக்கேட்ட எருமை நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, 'நீ இங்கேயே இருந்தாலும், பறந்து சென்றாலும் எனக்கு எல்லாமே ஒன்றுதான். நீ வந்ததும் தெரியாது. நீ போனாலும் அதனால் எனக்கு ஒன்றுமில்லை என்று வெகு அலட்சியமாகக் கூறியது.
இதே கொசு, எருமையின் உடம்பில் அமர்ந்து, அதனைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சிவிட்டு இவ்வாறு பேசியிருந்தால், அப்போது எருமை என்ன கூறியிருக்கும்? இவ்வாறு கொசுவை அலட்சியப்படுத்தி இருக்குமா?
எனவே, ஒருவன், தான் சரியான இடத்தைத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோமா என்பதை முதலில் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னரே அந்த இடத்தில் உழைக்கத் தொடங்க வேண்டும். புத்திசாலித்தனமான உழைப்பு முடிந்தபின்னர், நீங்கள் அங்கிருந்து விடைபெற்றால் தான், உங்கள் அருமை அவர்களுக்குத் தெரியும். உங்களை யாரும் அலட்சியப் படுத்தாமல், அங்கீகரிப்பார்கள்.
ஆகவே, முதலில் உங்களை தெரிந்துகொண்டு பிறகு செயலாற்ற முற்படுங்கள்.