
சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. அதை பயன்படுத்துவது சிறப்பு. அதுதான் நம் கோபத்தையும் விரத்தியும் விரட்டும் சிறந்த மருந்து. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது கூட தெரியாத நிலையில் இருப்பதுதான் வாழ்க்கை. இந்த நிச்சயமற்ற வாழ்க்கையை வாழும் பொழுது ஏன் நிறைய சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அழுவதும், கோபப்படுவதும், விரக்தியை உண்டு பண்ணி கொள்வதாலும் என்ன லாபம்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.
சிரிப்பு என்பது ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தின் வெளிப்பாடு. இது ஒருவரின் மனதையும் உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும். சிரிப்பு எப்பொழுது வரும்? நகைச்சுவையான பேச்சாலோ, மகிழ்ச்சியான விஷயங்களை செய்யும் பொழுதோ தானாகவே சிரிப்பு வரும். மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சிரிப்பு என்பது ஒருவருடைய மனதை சீரமைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
நம்மைச் சுற்றி நகைச்சுவை உணர்வு மிக்கவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வது நம்மை எப்பொழுதும் கலகலப்பாக இருக்க வைக்கும். நகைச்சுவை படங்களை பார்ப்பதும், நம்மை நகைச்சுவை உணர்வு மிக்கவராக மாற்றிக் கொள்வதும் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணத்தைதேட வைக்கும். சிரிப்பு என்பது மனிதர்களைத் தவிர பிற உயிர்களுக்கு கிடையாது. இந்த இயற்கை அளித்த நன்கொடையை சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பயன்படுத்த நோயின்றி வாழலாம். சிரிப்பவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
சிரித்து மகிழ்வதால் பல நன்மைகள் உண்டாகும். மன அழுத்தம் குறையும். பதற்றம் குறைந்து மனதையும் உடலையும் லேசாக்கும். நோய்களை குணப்படுத்தும் திறன் மனம் திறந்த சிரிப்புக்கு உண்டு. மகிழ்ச்சியான சிரிப்பு புத்துணர்ச்சியை உண்டாக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை முழுவதுமாக கொடுக்கக் கூடியது சிரிப்பு மட்டுமே.
ஆனால் காரணமின்றி சிரிப்பதோ, கேலிச் சிரிப்போ தவறானது. தேவையின்றி சிரித்தால் கேலிக்கு ஆளாவோம். சிரிப்பு சிறந்த டானிக். எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டு சிடுசிடுக்காமல் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக வலம் வர முடியும்.
எதிராளி சிரிக்கும் பொழுது, தான் சாதிக்க விரும்பியதை பேசி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்கள் சிலர். நம்முடைய சிரிப்பால் மூளையில் எழும் தூண்டுதல், 2000 சாக்லேட் பார் சாப்பிடுவதற்கு சமம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சிரிப்பு எவர் மனதையும் மயக்கும் திறன் கொண்டது. அனைவரையும் கவரக்கூடிய அற்புத சக்தி படைத்தது. எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத ஒரு உயர்ந்த வரம் எதுவென்றால் அது மனிதனுக்கு மட்டும் கிடைத்த சிரிப்பு தான்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்! உண்மைதானே நண்பர்களே!