
மனம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. காரணம் அது பல்வேறு காரணிகளால் பாதிக்கப் படுவதுதான். நாம் வாழுகின்ற இடம், வேலை செய்கின்ற இடம் மற்றும் நம்மைச் சுற்றி உள்ள மனிதர்கள் போன்ற காரணிகளால் நம் மனநிலை பாதிக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் பேச்சும் செயலும் கூட நம் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினம் தினம் எதிர்நோக்கும் சில நல்ல அனுபவங்களும், மோசமான அனுபவங்களும் கூட மனநிலையில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும்.
சுற்றுச்சூழல், நம்மைச் சுற்றி உள்ளவர்களால் ஏற்படும் அனுபவங்கள், உணர்ச்சிகள் போன்ற பல விஷயங்கள் நம் மனநிலையை தினம் தினம் பாதித்துக்கொண்டு தான் இருக்கின்றது. கோபம், சோகம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் நம் மனநிலையை மாற்றுவதுடன் நம் உடல் நலத்தையும் பாதிக்கத்தான் செய்கிறது. மனம் ஒரே நிலையில் இருப்பதில்லை. அப்படி இருப்பதால்தான் நாம் சாதாரண மனிதர்களாக இருக்கிறோம். நம்மால் மனதை கட்டுப்படுத்த தெரிந்திருந்தால் இந்நேரம் மகான் ஆகி இருப்போம்.
மனம் என்னும் குரங்கை அதன் போக்கில் விட்டால் ஆட்டம் காட்டத்தான் செய்யும். கிளைக்கு கிளை தாவிக்கொண்டு, ஊசலாடிக் கொண்டே இருக்கும். ஒரே மனநிலையில் இருக்க முடியாது என்பது உளவியல் ரீதியான உண்மைதான். ஆனால் மனதை கட்டுக்குள் கொண்டு வர நாம் செய்ய வேண்டியது எல்லாம் நம் மனதில் எழும் எண்ணங்களை கவனிக்க வேண்டியதுதான். தவறான எண்ணங்களும் தோன்றும், மகிழ்ச்சி, துயரம் என அலையடித்துக் கொண்டிருக்கும் மனத்தை அதன் போக்கில் போகவிடாமல் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும்.
'மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்' என்ற ஔவையாரின் கூற்றை மறக்க வேண்டாம். மனம் அலைபாயாமல் தெளிவாக இருந்தால்தான் நம்மால் கலக்கமின்றி எந்த ஒரு செயலையும் திறம்பட செய்து முடிக்க முடியும். அதற்கு சிறந்த மனப் பயிற்சி பெறுவது என்பது அவசியம். மனதை ஒருநிலைப்படுத்த சிறிது நேரம் தனியாக அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு எடுத்து மெதுவாக வெளிவிடவும். இந்த பயிற்சியை திரும்பத் திரும்ப பலமுறை செய்ய நம் மனம் அமைதிப்படுவதுடன் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவும். இதனால் செய்யும் காரியத்தை நன்றாக ஆர்வமுடன் செய்யவும், கவனச்சிதறலை தடுத்து நம் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.
மனம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அது ஒரு தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்பட்டுதான் இயங்கும். ஒருவரின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் மனநிலை வெவ்வேறாக மாறும். அத்துடன் சுய உணர்தல் மற்றும் தன்னம்பிக்கையும் அவ்வப்போது மாறுபடும். மனம் ஒரு நிலையான தன்மை கொண்டதல்ல. ஆனால் அவற்றை சிறந்த மன பயிற்சிகள் மூலம் நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதற்கு சிறந்த மன உறுதியும், பயிற்சியும் தேவை.