
எவ்வளவு பெரிய அழகனாயினும் அழகியேயாயினும் சரி; கோபம் வரும்போது அவர்கள் முகம் கோணலாகிப் பார்க்கவே சகிக்காததாகி விடுகிறதல்லவா?
ஒருவன் முன்னேறுவதற்கு முக்கியமான தடைகளாக இருப்பவை இரண்டு, ஒன்று கோபம், மற்றொன்று தான் என்ற அகங்காரம். இந்த இரண்டு கெட்ட குணங்களுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. அடிபணிந்து அடிமையாக ஆகிவிடக் கூடாது.
வீட்டிலோ, அலுவலகத்திலோ, வெளி உலகத்திலோ மற்றவர்கள் செய்யும் சில தவறுகளைப் பார்க்கும்போதும், நம்முடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி மற்றவர் பணிந்து செயல்படாதபோதும் ஆத்திரம் ஏற்படலாம்.
மற்றவர் செய்யும், அல்லது செய்துவிட்ட தவறு நம்முடைய கண்களுக்குப் பெரிதாகத் தெரியும்போது, கோபம் ஏற்படலாம். சிலரிடம் மூக்குக்கு மேல் கோப உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவரோடு நெருங்கி வாழ்ந்திருப்பவர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நட்பாக இருந்தால் விலகிவிடலாம்; உறவாக இருந்தால்?
இப்படி தொட்டதற்கெல்லாம் கோபப்படுவது நம்முடைய உடலை வெகுவாகப் பாதித்துவிடும்.
கோபத்தில் வார்த்தைகள் தடிப்பதும், கண்மூடித்தனமாக அடித்து விடுவதும், ஏன் கொலையே செய்து விடுவதும்கூட நாம் அடிக்கடி செய்திப் பத்திரிகைகளில் பார்ப்பவைகள்தா
கோபிக்கிற ஒவ்வொரு நிமிடமும், மகிழ்ச்சியாயிருக்கின்ற ஒரு நிமிடத்தை இழக்கிறோம். அதனால் நமது கோபத்தாலே நமக்குத்தான் நஷ்டம்.
'கோபம் கொள்ளாதீர்கள். கோபம் வாயைத் திறக்கும், ஆனால் கண்களை மூடிவிடும்' என்கிறார் கேட்டோ என்கிற அறிஞர்ஆசை, பொறாமை போன்ற கெட்ட குணங்களைக் காட்டிலும், கோபம் கொடியது. ஆசை, பொறாமை போன்றவை தனக்கு மட்டும் தீங்கு விளைவிக்கின்றன. ஆனால், கோபம் கொண்டவனோ மற்றவனையே முதலில் தாக்குகிறான். அதனால் கோபம் ஒரு சாபம்.
கோபம் இல்லையேல், விரோதிகள் கிடையாது' என்கிறது நீதி சதகம்.
'ஆறுவது சினம்' என்கிறார் ஔவையார்.
'உன்னுடைய வாழ்வு சிறப்பாக இருக்கவேண்டுமா? அப்படியானால் கோபம் உன்னுடைய சத்ருவாக இருக்கட்டும் என்கிறார் பாம்பாட்டிச்சித்தர்.
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை' என்கின்றார் அருணகிரிநாதர், கந்தரலங்காரத்தில்.
நாம் கோபத்தை அடக்க வேண்டுமென்றால் நம்மிடம் பொறுமை, அன்பு, நிதானம் ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்."
நம்முடைய சொல்லைவிடச் செயலைத்தான், செயலின் நல்ல விளைவைத்தான் இந்த உலகம் எதிர்பார்க்கிறது. சமூகம் இதை மிகவும் உன்னிப்பாக கவனித்துவருகிறது.
தற்பெருமை எங்கே முடிகிறதோ அங்கேதான் ஆனந்தம் ஆரம்பிக்கிறது' என்கின்றார் ஓர் அறிஞர் கோபம், தற்பெருமை
அகங்காரம் ஆகிய மூன்றும் மனிதனை படுபள்ளத்தில் கொண்டு சேர்க்கும் என்பதை கவனத்தில்கொண்டு வாழ்வது வாழ்வை சிறப்புள்ளதாக ஆகும்.
'கோபம் ஒரு சாபம்' என்பதை அன்றாடமும் ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தால் நமக்கு ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதமுண்டு.