

'கௌரவத்தை இழப்பதைவிட கண்களை இழப்பது மேல்' என்பது பழமொழி. கௌரவத்தை கண்ணுக்கு நிகராக கருதலாம். கண்ணில் தூசி விழுந்துவிட்டால் வலிக்கவும் நீர் வரவும் ஆரம்பிக்கிறது. அவ்வாறே ஒருவருடைய நற்பெயருக்கு அணு அளவு மாசு ஏற்பட்டால் நற்பெயர் முழுவதும் கெட்டுப் போய்விடும். ஆகவே கௌரவம் என்பது விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை போன்றது.
மாணிக்கத்தில் சிறு களங்கம் ஏற்பட்டால் அதன் மதிப்பு குறைந்து விடுவதைப்போல நம்முடைய நட்பிற்கு இழுக்கு ஏற்பட்டாலும் வாழ்வு முழுவதும் கெட்டுப்போய்விடும்.
ஒருவன் கண்ணியமான குடும்பத்தில் பிறந்து இழிவானவனாக இருப்பதை விட தாழ்ந்த குடும்பத்தில் பிறந்து கண்ணியம் மிக்கவனாக இருப்பது எவ்வளவோ நல்லது.
நற்பெயருக்கும் நல்ல புகழுக்கும் களங்கம் ஏற்படாத வகையில், நம்முடைய திறமையாலும் நல்லொழுக்கங்களாலும் பேணிப் பாதுகாத்து வருவதே நாம் நற்குடியில் பிறந்தோம் என்பதற்கான சிறந்த அடையாளமாகும்.
ஒழுக்கத்துடன் வாழ்வதே நற்குடி பிறப்பின் தன்மையாக இருப்பதால் இதனை உணர்ந்து வளமுடன் வாழ வேண்டும். ஒருவருடைய நற்பெயரை ஒரு நொடிப் பொழுதில் அழித்துவிட முடியும். வீட்டை கட்டுவது கடினம். ஆனால் அதை அழிப்பது வெகு சுலபம். பாலை போன்றது தான் நற்பெயர். அது கீழே கொட்டி விட்டால் மீண்டும் அள்ளி விட முடியாது.
'நற்பெயரானது ஆன்மாவின் அருகில் உள்ள ஆபரணம்' என்பது ஷேக்ஸ்பியரின் கருத்து. ஒழுக்கம் என்ற வாசலில் கால் வைத்தால் தான் கௌரவம் என்ற கோவிலுக்குள் போக முடியும் என்பதனை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
எத்தகைய சூழ்நிலையிலும் நமக்கு பல சோதனைகள் ஏற்பட்டாலும் செய்யத் தகுந்த செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் .செய்யக்கூடாத செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.
பாலை சுண்ட காய்ச்சினாலும் அதனுடைய சுவை ஒருபோதும் குறையாது. சந்தனம் அரைக்கப்பட்டாலும் அதனுடைய மணம் மாறாது. கரும்பை உடைத்து நெறித்து ஆலையில் போட்டு சாறு பிழிந்தாலும் இனிய சுவையுடன் இருப்பதைப் போன்றே நாமும் இருக்க வேண்டும்.
ஒழுக்கம் எல்லா வகையான செல்வங்களையும் விட உயர்வானது. ஒழுக்கம் நம்முடைய தன்மையை வெளிப்படுத்தும் கலங்கரை விளக்கமாக இருக்கிறது. ஒழுக்கம் முன்னால் செல்லும் போது கௌரவம் அதனை பின்தொடர்ந்து செல்லுமே தவிர ஒருபோதும் நிற்காது. ஆகவே நல்லொழுக்கம் எஃகு கவசம் போன்றது.
அதனை அணிந்து கொண்டு வாழ்க்கை போராட்டத்தில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியும்.