நாம் செய்யும் காரியத்தை திருந்தச் செய்வோம்!

Let's change what we do!
motivational articles
Published on

செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும். நாம் செய்கின்ற எந்த சிறுசெயலானாலும் பிறர் அதில் குறை காணாதபடி செய்யவேண்டும். மற்றவர் நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். எடுத்த காரியத்தை சிந்தாமல் சிதறாமல் சீராக முடித்திட அந்த வேலையில் முழுமனதுடன் ஈடுபட்டாலே போதும். காரியம் தானாகவே சிறப்பாக நடந்துவிடும். செய்யும் காரியத்தை திருந்தச் செய்வதே நம் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் சமாளிக்க முடியாத சூழ்நிலையிலும் முழுமூச்சாக நின்று செய்ய வேண்டிய காரியத்தை முடித்து விடுவதே சிறப்பு.

எந்த ஒரு செயலை செய்தாலும் ஆத்மார்த்தமாகவும், ஈடுபாட்டுடனும் செய்து முடிக்க வேண்டும். இதைத்தான் செய்வன திருந்தச்செய் என்று அவ்வை கூறியுள்ளார். எந்த ஒரு செயலை செய்ய எடுத்துக் கொண்டாலும் அதற்கான முறைப்படி சரியாகவும் மிக நேர்த்தியாகவும் செய்வது நல்லது. மனதாலும் உடலாலும் முழு ஈடுபாட்டுடன் திறம்படச் செய்ய வேண்டும்.

எந்த ஒரு செயலையுமே வேண்டா வெறுப்பாக செய்தால் சரியாக வராது. விரும்பிச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அந்த வேலையில் நம் திறமையை முழுமையாக காட்ட முடியும்.

மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் மனிதனுடைய வாழ்வின் உயர்விற்கு உறுதுணையாக நிற்கின்றன. மனம் ஒன்றை தீவிரமாக நினைக்க அது சொல்லாக வெளிப்படுகிறது. பின்பு அதுவே செயல் வடிவம் பெறுகிறது. அந்த செயல் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய எண்ணம் ஏற்றம் மிக்கதாக இருக்க வேண்டும். நாம் சொல்கின்ற சொல்லும் பயனுடையதாக இருந்தால்தான் நாம் செய்கின்ற செயல் சிறக்கும். செய்கின்ற செயல் சிறக்க வேண்டுமானால் அந்த செயலை திருந்தச் செய்யவேண்டும் அதாவது நாம் செய்கின்ற செயல் செம்மையாக இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
முன்னேற்பாட்டுடன் சவால்களை சந்திப்பதில் தவறு இல்லை!
Let's change what we do!

ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது அதை ஏன் எதற்காக செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பித்தால் உந்துதல் தானாக கிடைக்கும். பெரிதாக இலக்குகளை அமைத்துக் கொள்ளாமல் சிறிய இலக்குகளாக பிரித்து செயல்படுவது நல்லது. அப்படி செய்வது சுலபமாக இருப்பதுடன் ஒவ்வொரு சிறிய இலக்கையும் அடையும் பொழுது உந்துதல் அதிகரிக்கும். அந்த செயலை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும்.

ஆனால் ஒரு சிலரோ ஒரு காரியத்தை எடுத்தால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரகதியில் ஏனோ தானோவென்று தப்பும் தவறுமாக ஒழுங்கின்றி செய்து முடிப்பார்கள். இதனால் அவர்களுக்கும் திருப்தி ஏற்படாது. அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைத்தவருக்கும் அதிருப்திதான் ஏற்படும்.

ஒரு காரியத்தை சரியாக செய்ய முடியாது என்று தோன்றினால் அதை தொடங்காமலேயே விட்டுவிடுவது நல்லது. தொடங்குவதற்கு முன் அதைப் பற்றிய ஆராய்ச்சி தேவை. தொடங்கிய பின்னரோ அதை எப்படி நல்ல முறையில் முடிப்பது என்பதில்தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.

அத்துடன் இறுதிவரை அதன் மீது உள்ள ஆர்வத்தையும் குறைத்துக் கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் நாம் தொடங்கிய செயல் நல்ல முறையில் முடிவடையும். எதுவுமே நேர்த்தியாக செய்யும் பொழுது தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். பிறரை திரும்பிப் பார்க்க வைக்கும். பாராட்ட வைக்கும்.

இது எல்லா துறைக்கும் பொருந்தும். அதனால்தான் காலத்தால் அழியாத ஔவையின் அமுத மொழியான செய்வனத் திருந்தச்செய் போன்ற அமுதமொழிகள் காலம் கடந்தும் நம்முடன் பயணித்து கொண்டிருக்கின்றன. எந்த ஒரு செயலிலும் ஒழுங்கு, நேர்த்தி இருந்தால் அனைவராலும் திரும்பிப் பார்க்கப்படுவோம். பலரின் கவனத்தை ஈர்க்கும் சக்தி இதற்கு உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com