
"நாளை, நாளை என்று எதையும் தள்ளிப்போடாதே. உனக்கு நாளைய தினம் சூரியன் உதயமாகாமலே போகலாம்" - இது எமர்ஸன் கருத்து.
துன்பங்களுக்கு நமது பார்வை, அணுகுமுறை, செயல்பாடு இவையே காரணமாகின்றன. நம்மில் பலபேர் எப்போதோ செயலாற்ற வேண்டிய செயல்களுக்காக; இன்றைக்கே; அந்நிகழ்வுகளுக்காக நேரத்தையும் எண்ணத்தையும் செலவழிக்கத் துவங்குகின்றனர். இதன் விளைவாக இன்றைய இனிய பொழுதினையும், இன்றைக்கு செய்து முடிக்கின்ற செயல்களுக்குரிய முயற்சிகளையும் தொலைத்து விடுகின்றனர். எண்ணங்களில் சிக்கல், மனச்சோர்வு, செயல்பாடுகளில் தடுமாற்றம். இன்றைய பணியிலே தோல்வி, முடிவு துன்பச் சுமைகள் நம் மனதிலே வந்து குந்திக்கொள்கின்றன.
எத்தனையோ மாணவர்கள் முழு ஆண்டுத் தேர்வுக்காக கவலைப்பட்டுக் கொண்டே காலாண்டுத் தேர்வில் தோற்றுப் போனவர்கள் ஏராளம்.
கண்களுக்குத் தெரியாத, சரியாகப் புரிந்துகொள்ள இயலாத, தொலை தூரத்தில் உள்ளவைகளை அடைவதில் நமது கவனம் காலத்தை செலவழிப்பதை விட்டு - நமது கைகளுக்கு அருகில் சுலபமாகக் கிடைக்கக் கூடிய பலனை அடையக் கூடிய மனநிலைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.
நேரம்தான் நமக்கு அவசியமான தேவை. நேரத்தில் தன்மையை நாம் போற்றிப் பொன்போல் காத்திடப் பழகி கொண்டால் நாளையப் பொழுதில் மயங்குவதை விட்டு இன்றைய நாளை இனிதாக்கிடவும், நமது எண்ணங்களை துன்பச் சுமை சுவீகாரம் செய்யாது காத்திடவும் இயலும். நேரத்தை முறையாக முறைப்படுத்திக் கொண்டு, செய்ய வேண்டிய செயல்களை வகுத்துக் கொண்டால், மனம் கொந்தளிப்பும். கொதிப்பும் இல்லாது சுகமாக நம்முள் அரசாட்சி செய்யும், வழிபாட்டை நாம் எவ்வாறு பூஜித்து வாழ்கின்றோமோ அவ்வாறே நேரத்தை வணங்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
"கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறைகளுள் உயர்ந்த விதியாகும் என்று சொன்னான் மில்டன் என்ற மேலைநாட்டுக் கவிஞன்.
வாழ்க்கை என்பது நமக்கு ஆண்டவனால் வழங்கப்பட்ட வேனிற்காலம் போன்றதாகும். விரைந்து ஓடுகின்ற மணித்துளிகளை, நாம் வசப்படுத்திக்கொண்டு பயனுள்ளதாக்கிக் கொள்வது நம் கையிலேயே உள்ளது.
காலத்தை வீணாக்குவது வாழ்க்கையை வீணாக்கியதற்குச் சமம் என்று சொன்னான் எமர்சன்.
நேற்றைய பொழுதை எண்ணி வருந்துவதை விட்டு விட்டு, நாளைய பொழுதிற்கும் காத்திருக்காது, இன்றைய பொழுதிற்குள் செய்யவேண்டிய செயல்களுக்கு நம்மை நாம் தயாராக்கிக் கொண்டால், நமது மனதிலே துன்பத்தின் சுவடு பதிவதற்கு வாய்ப்பே இல்லை. இத்தகைய குணத்தை வளர்த்துக்கொண்டால் நாளைய தினத்தின் பயம் பஞ்சுபோல் பறந்தோடிவிடும்.
"நேற்றைய கதவை மூடி; நான் அதன் சாவியை எறிந்துவிட்டேன். இன்றைய தினத்தைக்கண்டு கொள்வதிலே ஆர்வம் காட்டினேன். எனக்கு நானைய தினத்தின் பயம் பற்றித்தெரியவில்லை” என்றான் லாராமூர் (Laramore) என்ற அறிஞன்.
எனவே, துன்பச்சுமை நம்மை தாக்காது இருக்க இன்றைய பொழுதை இனிதாக்கிட நமது எண்ணங்களை காலத்தை கணக்கிட்டு இன்றே செய்வோம்: நன்றே செய்வோம்.