
ஷோஷின் என்பது ஜென் பௌத்த கருத்தாகும். இதற்கு தொடக்க மனம் என்று பொருள். ஒரு மனிதன் தனது இலக்குகளை அடைய ஷோஷின் நுட்பம் உதவுகிறது ஆர்வமுள்ள, திறந்த மனமுடைய, தகவமைப்புத் திறன் கொண்ட மனநிலையை வளர்ப்பதை இந்த நுட்பம் ஊக்குவிக்கிறது. இது தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வெற்றிக்கு உதவுகிறது. இந்த நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் ஒரு மனிதன் தனது இலக்குகளை விரைவில் அடைவது உறுதி.
ஷோஷின் நுட்பத்தின் சிறப்புகள்; கற்றலுக்கான திறந்த தன்மை;
ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவர் அதைப் பற்றி முன்பே சிறிது அறிந்திருந்தாலும் அவற்றை விட்டு விட்டு புதிதாக திறந்த மனதுடன் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். முன்கூட்டிய எண்ணங்களையும் ஈகோவையும் விட்டுவிட வேண்டும். புதிய விஷயங்களை புதிய கண்ணோட்டத்துடன் அணுகுவது அவசியம். இந்த மனநிலை விரைவான கற்றல் மற்றும் தகவமைப்பு திறனை உருவாக்குகிறது. இது தடைகளைத்தாண்டி இலக்குகளை அடைவதற்கு மிகவும் முக்கியமானது.
பரிசோதனையை ஊக்குவித்தல்;
தோல்வி பயம் இல்லாமல் புதிய முறைகளை முயற்சிக்க ஷோஷின் ஊக்குவிக்கிறது. தொடக்க நிலையில் இருப்பவர்கள் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் தங்களது வேலையை தொடங்குவார்கள். இது எழுத்து, இசை அல்லது வடிவமைப்பு போன்ற படைப்புத் துறைகளுக்கு மிக முக்கியமான அம்சமாகும்.
தகவமைப்புத் திறனை மேம்படுத்துதல்;
இந்த நுட்பம் நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்புத் தன்மையை வலியுறுத்துகிறது. தனி நபர்கள் மீள்தன்மை மற்றும் படைப்பாற்றலுடன் கூடிய சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. இது வேகமாக மாறிவரும் தொழில்கள் அல்லது சிக்கல் தீர்க்கும் சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கிறது.
ஈகோவை விடுதல்;
தனக்கு எல்லாம் தெரியும், என்கிற ஈகோவை விடும்படி ஷோஷின் வலியுறுத்துகிறது. தனக்கு ஏற்கனவே உள்ள நம்பிக்கைகள், நிபுணத்துவம் மற்றும் திறமையை பற்றி கவலைப்படாமல் ஒரு விஷயத்தை புதுமையான கோணத்தில் புதிதாக அணுக உதவுகிறது.
தோல்வி பயத்தைத் தடுத்தல்;
பலர் தம் திறமைகளைப் பற்றிய சுயசந்தேகத்துடன் இருப்பார்கள். தாம் திறமையற்றவர்கள், இந்த விஷயங்களை செய்ய ஆரம்பித்தால் அது தோல்வியில் முடியும் என்கிற பயத்துடன் போராடுகிறார்கள். இதனால் புதிய விஷயங்களை முயற்சிக்க அவர்கள் தயங்குகிறார்கள். இந்த மனத்தடையை ஷோஷின் உடைக்கிறது.
முயற்சியும் பொறுமையும்;
சோஷினை அடைவதற்கு நிலையான முயற்சியும் பொறுமையும் தேவை. மக்கள் பெரும்பாலும் விரைவான முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். உடனடி முன்னேற்றம் எப்போதும் பயன் தராது. சிலர் தங்கள் முயற்சியில் உடனே பலன் கிடைக்காவிட்டால் விரக்தி அடைந்து அதை பயிற்சியை கைவிடுகிறார்கள். ஆனால் ஷோஷின் பொறுமையாக ஒரு விஷயத்தை செய்வதற்கு மனிதனை ஊக்குவிக்கிறது.
ஆர்வத்தை வளர்த்தல்;
ஷோஷின் ஒரு நபருக்கு மனத்தாழ்மையை கற்றுத்தருகிறது. அதே சமயத்தில் ஆர்வத்தையும் அதிகரிக்க செய்கிறது. ஆர்வம் இருந்தால்தான் ஒரு மனிதன் புதிய விஷயங்களை திறம்பட கற்றுக்கொள்ள முடியும்.
தொடர்ச்சியான முன்னேற்றம்;
ஷோஷின் நுட்பத்தை பயன்படுத்தும்போது காலப்போக்கில் சிறிய ஆனால் நிலையான மேம்பாடுகளை உருவாக்கலாம். இந்த அணுகுமுறை இலக்குகளை நோக்கி நிலையான முன்னேற்றத்தை அடைவதை உறுதி செய்கிறது.
நினைவாற்றல் அதிகரித்தல்;
இந்த நுட்பம் பயிற்சி செய்யும் நபரை நிகழ்காலத்தில் தெளிவான மனநிலையில் இருக்க உதவுகிறது. அவரது நினைவாற்றலை அதிகரிக்கிறது. தேவையில்லாத கவனச் சிதறல்களை தடுத்து மேம்படுத்தப்பட்ட கவனத்தை உருவாக்குகிறது. இதனால் தனது குறிக்கோளை நோக்கிய முன்னேற்றத்தை நோக்கி அவர் நகர முடியும்.
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அமைப்புகளில் ஷோஷின் உதவுகிறது. நிர்வாகம், வணிகம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்த நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஜப்பானிய தற்காப்புக் கலைகளில் ஷோஷின் மிக முக்கியமாக கருதப்படுகிறது.