

பொதுவாக நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது. எதையும் நாம் முழுமையாக கற்றுத்தேறவில்லை. நமக்கு தொியாத பல விஷயங்களை, நமக்கு தேவையானவற்றை கேட்டு அறிந்துகொள்ளுதல் நல்லது. அதில் நமக்கு சகஜமான நிலை பாடுவர வேண்டும்.
நமது எண்ணமும், செயல்பாடும் தூய்மையானதாக இருக்கவேண்டும். அதேபோல நமது கருத்துகளில் தவறு இருக்கும் பட்சத்தில் தவறை திருத்திக்கொள்ளவோ, அல்லது தவறு என்பதை ஒத்துக்கொள்ளவோ முன் வரவேண்டும் அதுவே நல்ல அணுகுமுறை. அதைவிடுத்துதான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என பிடிவாதம் பிடிப்பதால் நமக்கான மரியாதை துளித்துளியாக குறையும். அதனால் உறவு மற்றும் நட்பு வட்டங்களில் நெருக்கம் குறையவும் வாய்ப்புண்டு. எங்கும் எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசரம் வேண்டாம். அந்த அவசரமானது நமக்கு பல இழப்புகளை தந்துவிடுமல்லவா!
ஆக, நம்மிடம் இருக்கும் விவேகத்தை கடைபி்டிக்க ஒரு போதும் தவறக்கூடாது. இருக்கும் வரை அன்பாய் இருப்போம், இருப்பதை பகிா்ந்துகொள்வோம் என்ற நிலைபாடு கடைபிடித்தால் நல்லதே தேடிவரும். பொதுவாக நமக்குள் குடும்பத்தில் ஏற்படும் சொத்து பாகப்பிாிவினையின்போது சகோதரர்களுக்குள் ஒரு செண்ட் நிலம் கூடுதலாக வந்துவிட்டால் பேசி தீா்வு காணவேண்டும்.
அதை விடுத்து வம்பு, வழக்கு, கோா்ட் என போவதால் யாருக்குமே பிரயோஜனம் இல்லை. தேவையில்லாத அலைச்சல், பணம் செலவாகுதல் மனஉளைச்சல், ஒருவருக்கு ஒருவர் பகை, இது நாளடைவில் கள்ளிச்செடிபோலவும் கருவேல மரம் போலவும் வளர்ந்துவிடுமல்லவா! அந்த விரோதமானது நமது சந்ததிவரை தொடரும்.
இதனால் நாம் அடைந்த பலன் என்ன? விரோதம்தான். அந்த தருணத்தில் மூன்றாம் நபரின் தலையீடு எட்டிப்பாா்க்கும், இது தேவையா என்பதை சிந்தித்துப் பாா்க்கவேண்டும். பரந்த மனப்பான்மையுடன் நமக்குள் சச்சரவுகள் வராமல் விட்டுக்கொடுக்கும் தன்மையுடன் வாழ்வது அனைவருக்கும் நல்லதே!
ஒரு சிறிய காற்றுதான் பலூனை பொிதாக்குகிறது. அதில் போதுமான காற்றின் அளவுதாண்டி செல்லும்போது பலூன் வெடித்துவிடுகிறது இதுதான் வாழ்வின் தத்துவம்.
அதேபோல கணவன் மனைவிக்குள் வரும் கருத்து வேறுபாடு அதில் ஒருவரை ஒருவர் புாிந்துகொண்டு செயல்பட்டாலே போதும். நான்கு சுவர்களுக்குள் பேசித்தீா்வு ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர அதை விடுத்து விஷயம் வெளியே வரும்போதுதான் உறவு மற்றும் நட்பு வட்டம் அதையும் தாண்டி மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதால் விஷயம் கைமீறி போய் விடுகிறது.
ஒருவருக்கு ஒருவர் பாழாய்ப்போன கருத்துவேறுபாடு, மற்றும் ஈகோவால் பலரது வாழ்க்கை சரியான புாிதல் இல்லாமல் வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் செல்போன், சோசியல் மீடியா, தொலைக்காட்சிதொடர், இவைகளில் வரும் நல்ல விஷயங்கள் கசப்பு மருந்தாகவும், வாழ்க்கைக்கு தேவையில்லாதவைகள் இனிப்பு பலகாரமாகவும் தொிகிறது.
அந்த நேரத்தில் அவரவர் சுயபுத்தி வேலை செய்யவேண்டும். அடுத்தவர்கள் ஆயிரம் அறிவுரை சொல்வாா்கள் அதில் நல்லது கெட்டதை உணரும் பக்குவம் நமக்கு வரவேண்டும். நமது வாழ்க்கை நமது கையில்தான் என்ற இலக்கோடு நோ்மறை சிந்தனையோடு இறைநம்பிக்கை கொண்டு வாழ்க்கை எனும் ஓடத்தில் அழகாக பயணம் செய்யுங்கள். நிதானம் தவறாமல் வாழ்ந்துதான் பாருங்களேன். இனிமையான வாழ்க்கை இயல்பாய் அமையுமே!