

சில நேரங்களில் உங்களுடைய கஷ்டத்தை பொருட்படுத்தாது பிறரின் தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது உங்களின் தேவையை சுருக்கிக்கொண்டு உதவி இருப்பீர்கள். அப்படி உங்கள் உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் பிறகு உங்களையே தாக்குவது "வளர்த்த கடா மார்பில் பாய்வது" போல்தான் இருக்கும். அதற்காக நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவதை என்றும் நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் உளவியலாக பாதிப்பு ஏற்படும்.
பல நேரங்களில் உங்களோடு நல்ல நட்புடனும், புரிதலுடனும் இருக்கின்ற நண்பர், உறவினர்கள் கூட நீங்கள் வெற்றி அடையும் பொழுது உங்கள் மீது பொறாமைப்படுவது உண்டு. இதனால் போலியான நண்பர்களையும் உண்மையான விரோதிகளையும் கூட பெறுவதற்கான நிலை ஏற்படும். அவர்கள் அப்படி பொறாமை அடைகிறார்கள் என்பதற்காக நீங்கள் வெற்றி பெறுவதை நிறுத்தக்கூடாது. பொறாமைக்கு அயலும் இல்லை புறமும் இல்லை என்பது சொலவடை.
நீங்கள் நல்லதையே செய்தால் கூட உங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து உங்களை ஒரு சுயநலவாதிபோல் கருதி குற்றம் சுமத்துபவர்கள் பலர் அருகிலேயே இருப்பார்கள். அதற்காக நீங்கள் செய்யும் நல்லதை அப்படியே நிறுத்தி விடவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் எப்பொழுதும் எண்ணத்தில் எப்படி நல்லதை நினைத்து செய்வீர்களோ அப்படியே செய்தால் மனக்குழப்பம் ஏற்படாது .மனம் எப்பொழுதும் தெளிந்த சிந்தனையுடனேயே இருக்கும்.
நேர்மையாகவும் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது போன்றவை கூட உங்களைப் பிறர் தாக்குவதற்குக் வழிவகுக்கும். அதற்காக நீங்கள் உங்கள் பண்புகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும்போல் நேர்மையோடும் ஒளிவு மறைவு இன்மையோடுமே வாழுங்கள். அது உங்களை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்லும்.
இப்படி லட்சியங்களை அடைவதற்கு நீங்கள் பல ஆண்டுகளாக முயன்று கட்டியது ஓர் இரவில் தகர்க்கப்பட்டு விடக்கூடும் என்றாலும் அதை கட்டுவதை எப்போதும் தொடருங்கள். வாழ்வில் நினைத்ததை சாதித்து உயர்வீர்கள்.
சிலர் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற சுயநலவாதிகளாக இருப்பார்கள். அவர்கள்போல் நீங்கள் இருக்கவேண்டியது இல்லை. அவர்களின் செயல்கள் பிடிக்கவில்லை என்றாலும் எப்பொழுதும் போல் பரந்த மனப்பான்மையுடன் அவர்களையும் நீங்கள் நேசியுங்கள். அதனால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பண்பு நலன்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால் நீங்கள் வாழும்போது விரும்பிய இலக்கை அடையலாம். இந்தப் பண்பு நலன்கள் அதற்கு ஒத்துழைக்குமே தவிர முட்டுக்கட்டைப் போடாது. ஆதலால் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் இலக்கை நோக்கிய பயணம் வெற்றி பெறும்.