சுற்றுலா செல்வோம், உற்சாகம் பெறுவோம்!
வாஸ்கோடகாமா, கொலம்பஸ், மெகல்லன் போன்றவர்கள் உலக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதே சுற்றுலா சென்றதால்தான் என்பதை நாம் நினைவு கூறாமல் இருக்க முடியாது. "சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் இங்கு கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றார் பாரதியார். எல்லா இடங்களுக்கும் சுற்றுலா செல்லுங்கள். அங்கு நீங்கள் என்னென்ன பார்த்தீர்கள், ரசித்தீர்கள், வியந்தீர்களோ அதில் என்னென்ன நுட்பங்கள், நுணுக்கங்கள், கலை அம்சங்கள் பொருந்தி இருக்கிறதோ அவற்றை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து இங்கு செய்யுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
நம் மனம் விசாலமடைய சுற்றுலா ஒரு சிறப்பான விஷயமாக முன்பைக் காட்டிலும் இன்றைய தினங்களில் போற்றப்படுகிறது. முன்பெல்லாம் சுற்றுலா செல்ல புறப்பட்டால், அவ்வளவு பணத்தை வீணடிக்க வேண்டுமா? அதை சேமித்து ஏதாவது பொருள் வாங்கலாம். நகை வாங்கலாம். இடம் வாங்கி போடலாம் என்றெல்லாம் வீட்டினர் கூறுவார்கள். ஆனால் இப்பொழுது அதுபோல் யாரும் கூறுவது இல்லை.
நீங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சேமித்து வையுங்கள். அதை வருடம் தோறும் சுற்றுலா செல்வதற்கு பயன்படுத்துங்கள். அப்பொழுதுதான் மனம் உற்சாகமடையும். உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப எங்கெங்கு செல்ல முடியுமோ அங்கெல்லாம் சென்று பார்த்து கண்டுகளித்து மகிழ்ச்சி அடையுங்கள் என்றுதான் பெரியவர்களும் நமக்கு புத்திமதி சொல்கிறார்கள்.
"கண்ணாற வாழ்ந்தாலும் கலையாற இடம் வேண்டும்" என்பார்கள். நாம் எப்படித்தான் வீட்டிற்குள் சந்தோசமாக இருந்தாலும் அது ஒரு சலிப்பை கொடுக்கும். அவ்வப்பொழுது சுற்றுலா சென்று வரும் பொழுது அவை அவ்வப்பொழுது நமக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கும்.
வேலை செய்யும்போது இடை இடையே சலிப்பு ஏற்பட்டால் கூட நாம் சென்று வந்த இடங்களை ஒருமுறை மனதிற்குள் கொண்டு வந்து நிறுத்தினால், ஒரு சினிமா பார்ப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். சிறிது நேரத்திற்குள்ளே நாம் நல்ல மூடுக்கு வந்து விடுவோம். அதிலும் அந்தந்த இடங்களில் எடுத்த போட்டோக்களை பார்த்து ரசிக்கும் பொழுது அதே இடத்திற்கு மற்றொரு முறை சென்றபோது எடுத்த போட்டோவோடு ஒப்பிட்டு பார்த்தால் அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கும்.
வடநாட்டு பயணம் தென்னாட்டு சுற்றுலா இடங்கள் ,மலைவாச ஸ்தலங்கள், கோவா போன்ற கடற்கரை அதிகம் உள்ள மாநிலங்கள் என்று ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாம் சுற்றுலா சென்று அந்தந்த இடத்தின் உணவு முறை, கலாச்சார பண்பாடுகளை தெரிந்துகொள்ளலாம்.
நம் தமிழகத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களுக்குச் செல்லும்பொழுது இந்தியர்களே ஆனாலும் காலநிலை மாற்றத்தில் இருந்து உண்ணும் உணவு, உடுக்கும் உடை அனைத்தும் மாறுபடுகிறதா இல்லையா? அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு அந்தந்த இடங்களுக்கு சென்றால்தானே உணர்வுபூர்வமாக அவற்றை பார்த்து ரசிக்க முடியும்.
ஆதலால் சுற்றுலா செல்லுங்கள் உங்களை எப்பொழுதும் உற்சாகமான மனநிலையோடு வைத்துக்கொள்ள அவை உதவி புரியும். நாட்டுக்கும் சுற்றுலாத்தலங்களால் வருமானம் கிடைக்கும். அதில் நம் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?