
எந்தவொரு செயலையும், நிகழ்வையும் நாம் பார்க்கின்ற பார்வையின் அடிப்படையில்தான் அதனுடைய உண்மையான அர்த்தம் நமக்குப் புரியும். நமது பார்வைகள் தெளிவானால், நமது பாதைகளும் தெளிவாகும். நமது பாதைகள் பயணங்களும் இனிமையானதாக மாறும். தெளிவான சிந்தனையும், நல்ல கண்ணோட்டமும் கொண்டவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலான பிரச்னைகைளை தைரியமுடன் அணுகி வெற்றி பெறுகிறார்கள்.
ஒரு சமயம்,ஒரு லாரி, வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை அறிவு என்பவர் ஓட்டிவந்தார். அப்போது மின்சார ஒயரில் உரசி லாரியில் தீப்பிடித்துக்கொண்டது.
வைக்கோல் லாரியிலிருந்து புகை வருவதை பின்னால் வந்த வாகனங்களில் வந்தவர்கள் கவனித்து லாரிடிரைவர் அறிவுக்குத் தெரிவித்தார்கள். லாரியில் தீ வேகமாக பற்றி எரிந்தது. அதிர்ச்சியுடன் லாரியை காப்பாற்ற முயன்ற டிரைவர் அறிவு பதற்றப்படாமல் நிதானமாக ஒரு முடிவெடுத்தார். லாரி வந்துகொண்டிருந்த இடம் அருகே ஆறு இருந்தது.
இதைக்கவனித்த டிரைவர் அறிவு லாரியை ஆற்றுப்பாலம் அருகே வேகமாக ஓட்டிச்சென்றார். பின்னர் ஆற்றுக்குச் செல்லும் பாதை வழியாக சென்று லாரியை ஆற்றுக்குள் இறக்கினார். பாதி அளவு தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு லாரி வந்து நின்றது. ஆற்றில் குளித்தவர்களும், கரையில் நின்றவர்களும் ஓடிவந்து தீயை அணைத்தார்கள். லாரியிலிருந்த வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. இருந்தபோதும் லாரியை எரியாமல் காப்பாற்றினார் டிரைவர்.
பின்னர், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் லாரி முழுவதுமாக மீட்கப்பட்டது. லாரி டிரைவர் அறிவு சந்தர்ப்ப சூழ்நிலையை அறிந்து சரியாக குழப்பம் இல்லாமல் முடிவெடுத்ததற்கு அவருடைய பகுத்தறிவு பயன்பட்டது. சரியாக சூழலைப் புரிந்துகொண்டு சரியான கண்ணோட்டத்தோடு பிரச்னையை அணுகி சரியாக முடிவெடுத்ததுதான் அவரது பிரச்னைக்குத் தீர்வாக அமைந்தது.
ஒரு பிரச்னையை “இதுதான் பிரச்னை” என்று சரியாக கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் மிக எளிதாக வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். லாரி தீ பிடித்துவிட்டது என்பதை அறிந்த அறிவு லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடியிருக்கலாம். தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்லிவிட்டு காத்திருக்கலாம். லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தான்மட்டும் தப்பித்திருக்கலாம்.
ஆனால், தீப்பிடித்ததால் ஏற்பட்ட பிரச்னை தனக்கு மட்டுமல்ல, தன்னை நம்பி லாரியை ஒப்படைத்த லாரி உரிமையாளருக்கும் உண்டு என்பதை உணர்ந்துகொண்டு, சரியான கண்ணோட்டத்தோடு பிரச்னையைப் பார்த்து முடிவெடுத்த, அறிவின் 'பார்வை' வித்தியாசமாக அமைந்ததால்தான் பிரச்னையை சமாளித்து அவர் வெற்றிகாண முடிந்தது.
எனவே "எந்தவொரு பிரச்னையையும், சிக்கலையும் எளிதில் சமாளித்துவிடலாம்' என்ற நம்பிக்கையோடு நமது பார்வையை தெளிவாக வைத்துக்கொண்டால், வெற்றி என்பது அடைந்துவிடும் தூரத்தில் அருகில்தான் இருக்கிறது" என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.