
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களிடம் உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? என்று கேட்டால் சிலர் "எனது வெற்றிக்கு நான்தான் காரணம்" என்பார்கள்.
எனது வெற்றிக்கு எனது சிறப்புத் திறமைகள்தான் காரணம் என்றும் சிலர் சொல்லலாம்.
எனது புத்திக்கூர்மைதான் எனது வெற்றிக்கு காரணம் என சிலர் காரணம் சொல்வதுண்டு.
எனது உழைப்புக்குக் காரணம் எனது வெற்றிகள்தான் எனவும் சொல்வார்கள்,
"நான் வெற்றி பெற்றதற்கு என்னிடமுள்ள அனுபவம்தான் காரணம்"- என்று சிலர் மார்தட்டிப் பேசுவார்கள்.
ஆனால், அதேவேளையில் "உங்கள் தோல்விக்கு யார் காரணம்?" என்று யாராவது கேட்டால், "என் தோல்விக்கு எனது குடும்பம்தான் காரணம். எனது ஊர்தான் காரணம். எனது நண்பர்கள்தான் காரணம். எனது உறவுக்காரர்கள் தான் காரணம், நான் பிறந்த குடும்பம்தான் காரணம். நான் வாழ்கின்ற சூழல்தான் காரணம்" - என்று பலவித காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள்.
தங்களின் வெற்றிக்கு தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வதைப்போல, தங்களது தோல்விக்கும் தாங்களே காரணம் என ஏற்றுக்கொள்வதுதான் நியாயமான செயலாகும்.
நீ தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய். அதற்குக் காரணம் என்ன?" என்று மாணவர் சுகந்தனிடம் கேட்டார் பக்கத்து வீட்டுக்காரர்.
எனக்கு இப்படியொரு நிலைமை வருவதற்கு எங்கள் பள்ளிதான் காரணம், எங்கள் பள்ளியில் சரியான ஆசிரியர்கள் கிடையாது. ஒழுங்காக பாடம் நடத்த மாட்டார்கள். திருப்புதல் தேர்கூட (RevisiorTest) நடத்த மாட்டார்கள்.
பள்ளியில் என்கூட படிக்கும் மணவர்களும் நல்லவர்கள் இல்லை. சிலர் எப்போதும், யாரிடமாவது சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். எங்கள் தலைமை ஆசிரியர் அடிக்கடி லீவு போட்டுவிடுவார்" என்று தனது பள்ளியின் சூழலை காரணம்காட்டி தப்பித்துக்கொள்ள நினைத்தான் சுகந்தன்.
பக்கத்து வீட்டுக்காரர் விடுவதாக இல்லை, மொத்தமுள்ள 60 பேரில் 500க்கு 490க்குமேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 30பேர். சிலர் 495 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்றான் சுகந்தன்.
"தம்பி. சுகந்தன் நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உனக்கு எஸ்.எஸ். எல்.சியில் 318 மார்க்தான் கிடைத்திருக்கிறது. குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கு அந்தப் பள்ளிக்கூடம்தான் காரணம் என்று நீ சொல்கிறாய். ஆனால், உன்னோடு படித்த மற்ற மாணவர்களில் சிலர்கூட 400க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியிருக்கும்போது, உனக்கு மட்டும் பள்ளியின் சூழல் பிரச்னையாகத் தெரிகிறதே. அது ஏன்?" என்று கேட்டார்.
சுகந்தனால் பதில் சொல்ல முடியவில்லை.
சுகந்தனைப்போலவே, நிறைய மாணவ மாணவிகள் தங்கள் மதிப்பெண்கள் குறைவதற்கு பல்வேறு காரணங்களை புதிது புதிதாகக் கண்டுபிடித்து விடுகிறார்கள். தங்கள் மதிப்பெண்கள் குறைவதற்குக் காரணம் தாங்கள் படிக்கும் பள்ளிகள் என்றும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்றும் கூறுகிறார்கள். தங்கள் தோல்விக்கான பொறுப்பை அடுத்தவர்கள் தலையில் தூக்கி வைத்துவிடுகிறார்கள். ஒருவரது உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரது செயல்கள்தான் காரணமாகிறது என்பதை கண்டிப்பாக மாணவ - மாணவிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தனது பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புணர்வுடன், ஒரு செயலை ஆர்வமாகவும், அதிக ஈடுபாட்டுடனும் செய்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றிகளை குவிக்க முடியும்.
தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பழகியவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கிறார்கள். "தனது பொறுப்பு இது" என்று வரையறுக்கப்படாவிட்டாலும், எந்தப் பொறுப்பையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது.