
அடிக்கடி கவன சிதறல் ஏற்படுகிறதா? இது நல்லதில்லையே! ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கும்போது; அந்நேரத்தில் பல விஷயங்கள் உங்கள் மண்டையில் ஓடுகிறதா?. இது எதனால்? இதை தவிர்க்க வழியிருக்கா? இதற்கு காரணம் என்ன?
இன்றைய மிகைப்படுத்தப்பட்ட உலகில் (hyperconnected world) ஒரு பணியில் கவனம் செலுத்தும் திறன், அது ஒரு நிமிடமாக இருந்தால் கூட; அனைவராலும் அதை முழுமையாக செய்ய முடிவதில்லை. நமது நோக்கங்கள் அதன் மேல் இருந்தாலும்; மனமோ நிகழ்காலத்தில் நிலைத்திருக்க பெரும்பாலும் போராடுகிறது. இது ஒன்றும் குறைபாடு அல்ல; ஆனால், மூளை எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
நாம் கவனமுடன் இருக்கவும், சரியான முடிவு எடுக்கவும் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் (prefrontal cortex) தான் காரணம் என்று நரம்பியல் (Neuroscience) கூறுகிறது.
இன்னொரு புறம் நம் மூளையின் DMN (default mode network) ஆனது, நாம் ஓய்வு எடுக்கும்போது அல்லது நம்மை பற்றிய சுயபரிசோதனையின் போது செயல்படுகிறது. இந்த DMN தான் நாம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முயற்சிக்கும்போது; நமது கவனத்தை தொடர்பில்லாத சில எண்ணங்கள், நினைவுகளில் கொண்டு சென்று குழப்பத்தை உண்டாக்குகிறது.
எப்படி சரி செய்யலாம்?
கூர்மையான கவனத்தை வளர்ப்பதற்கு முதலில் நம் மூளைக்கு சில பயிற்சிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். அதில் ஒன்று தான் Mindful Anchoring.
நாம் விடும் மூச்சு, கேட்கும் ஒலி அல்லது எங்கு நிற்கிறோம் போன்ற விஷயங்களில் எந்நேரமும் கவனம் செலுத்தி கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மூச்சைக் கவனிக்க 30 வினாடிகள் எடுத்துக் கொள்வது. அதன் பின் நம் DMN ஐ ஓரங்கட்டிவிட்டு; நம் மூளையை கவனம் செலுத்த முதன்மைப்படுத்தலாம்.
மற்றொரு உத்தி task chunking ஆகும். அதாவது பெரிய பணிகளை சிறிய சிறிய இலக்குகளாக பிரிக்க வேண்டும். இது ஒருவரின் அறிவாற்றல் சுமையைக் குறைத்து மூளைக்கு தெளிவான, அதன் செயல்திறன் கேற்ற இலக்கை அமைக்க உதவுகிறது. இதை எல்லா நாளும் பயிற்சி செய்தால்; கவனச்சிதறலுக்கான வாய்ப்பைக் முற்றிலும் குறைத்துவிடும்.
வெளி தொடர்புகளின் தாக்கங்கள் சுற்றுச்சூழல் வடிவமைப்பும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குழப்பமான இடங்கள் (cluttered spaces), டிஜிட்டல் குறுக்கீடுகள் (notifications) போன்றவை கவனத்தை சிதறடிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இதற்கு முதலில் நம் பணி நேரத்தை சிறிய சிறியதாக பிரிக்க வேண்டும். போமோடோரோ நுட்பம் (Pomodoro Technique) போன்றவற்றை இதற்கு பயன்படுத்தலாம். இந்த நுட்பத்தின் படி நம் வேலைக்கு 25 நிமிடங்கள் கவனம் செலுத்தி விட்டு பின் குறுகிய இடைவெளி எடுத்தால்; அது மன ஒழுக்கத்தை (Mental discipline) வலுப்படுத்துமாம்.
வேலை நேரங்களில் உங்களுக்குள் தோன்றும் தொடர்பில்லாத எண்ணங்களை (அது முக்கியமானதாக இருந்தால்) அதை ஒரு பேப்பர் அல்லது நோட்டிலோ எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ‘இதை பற்றி அப்புறம் யோசிப்போம்’, ‘இதை நான் செய்ய வேண்டும்’, மாலையில் இதை நான் வாங்க வேண்டும்’ போன்றவை. இதனால் உங்கள் மனதில் இருந்து எதையோ இறக்கி வைத்த திருப்தியை உங்களுக்கு தரலாம். உங்கள் நிகழ்கால கவனத்தையும் அதிகரிக்கும்.