மௌனத்தை நேசிப்போம், மன நிறைவுடன் வாழ்வோம்!

Lifestyle articles
Motivational articles
Published on

ம் ஒவ்வொருவருக்கும் மௌனம் என்பது மிகவும் கம்பீரமான கவசம். பேசாத வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம் உண்டு. நம் மனதின் மூலமாக வாயிலிருந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் சக்தி மிக்கவை என்பதை நாம் உணரவேண்டும். வார்த்தை என்பது ஒரு சிறுதீப்பொறிக்கு ஒப்பாகும். நாம் பிரயோகிக்கும் ஒரு சிறுவார்த்தை தடித்து பெருகி பெரும் பிரச்னையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். ஆனால் இழப்பு என்பது இருதரப்பினருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் அனைவருக்கும் நாவடக்கம் தேவை என்பர். இதையே வள்ளுவப் பெருந்தகையும் “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

வளவள என்று பேசுபவருக்கு இந்த உலகில் மதிப்பு குறைவுதான். ஏனென்றால் அவரிடம் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை நாம் அனுமானிக்கத் தேவையிருக்காது. தன் பலத்தை பலவீனத்தை அவர் தனது வார்த்தைகளின் மூலமாக பிறருக்குத் தெரிவித்து விடுவதால் அவருடைய சக்தி மற்றும் பின்புலம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். எப்போதும் மௌமாய் இருப்பவரையும் அளந்து அளந்து பேசுபவரையும் இந்த உலகம் கூர்ந்து கவனிக்கும். அவரின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை யாராலும் அனுமானிக்க இயலாது. இத்தகையவர்களை பலசாலிகள் பின்புலம் உள்ளவர்கள் என நினைத்து ஒதுங்கிச் செல்லுவோரும் உண்டு.

சாலையில் நாம் வாகனத்தில் பயணிக்கும் போது எதிரில் வருபவரோ அல்லது நம்மைக் கடந்து செல்லுபவரோ அவர்கள் தவறு செய்துவிட்டு தேவையின்றி நம்மிடம் கோபமாகப் பேசிவிட்டுச் செல்லுவதை எதிர் கொள்ளுவோம். நாம் தவறு செய்யாதபட்சத்தில் நமக்கு கோபம் வருவது இயற்கைதான். ஆனால் இத்தகைய சமயங்களில் நமது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களைக் கடந்து செல்லுவதுதான் நல்லது. மாறாக அவர்கள் மீது கோபப்பட்டு வார்த்தைகளைப் பிரயோகித்தால் ஒரு சிறு விஷயம் பெரிய சண்டையாக மாறக்கூடும். இரண்டு தரப்பினருமே மன நிம்மதியை இழக்க நேரிடும். மேலும் தேவையில்லாத அலைச்சலும் உருவாகக் கூடும்.

இதையும் படியுங்கள்:
எளிதில் யாரையும் நம்பாதே! - மன உளைச்சலைத் தவிர்க்கும் வழிகள்!
Lifestyle articles

பேருந்துகளில் செல்லும்போது நமது கால் அருகில் இருப்பவர் மீது தெரியாமல் படக்கூடும். அதற்கு அவர்கள் கோபமாக எதிர்விளைவை பிரயோகிக்கக்கூடும். இத்தகைய சமயங்களில் ஒரு சாரியை உதிர்த்து விட்டு அமைதி காப்பது நல்லது. வேண்டுமென்றே யாரும் பிறருடைய காலை மிதித்துத் துன்பம் விளைவிக்கப் போவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்கவேண்டும். நம்முடன் வந்த ஒருவர் நமது காலை மிதித்தால் நாம் அவருடன் சண்டைக்குப் போவதில்லை. ஏனெனில் அவர் நம்மவர் என்ற எண்ணமே இதற்குக் காரணம். நாம் கூடுமானவரை பிறரையும் நம்மவராகவே கருதப்பழக வேண்டும்.

கூடுமானவரை கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பதை நாம் தவிர்க்கப் பழகவேண்டும். அவசரப்பட்டு கோபப்பட்டு பிறர் மீது வார்த்தைகளைப் பிரயோகிப்பதால் ஏதாவது நன்மை இருக்கப்போகிறதா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

யாரையும் எதிரியாகப் பார்க்காதீர்கள். உண்மையில் சொல்லப்போனால் நமக்கு இந்த உலகில் எவரும் எதிர்கள் இல்லை என்பதே உண்மை. ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை நமக்கு எதிரிகளை நாம் விரும்பாவிட்டாலும் கூட உருவாக்கித் தந்துவிடுகிறது.

தேவையின்றிப் பேசுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஒரே நாளில் இது எவருக்கும் சாத்தியமில்லை. ஆனால் முயற்சி செய்தால் மெல்ல மெல்ல இதை நாம் பழகிக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com