
வாழ்க்கை என்பது சிலருக்கு சுமையாகவும், சிலருக்கு சவாலாகவும், பொக்கிஷமாகவும் இருக்கும். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்! வாசல் தோறும் வேதனை இருக்கும்!
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்! என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளில் மிக அர்த்தம் பொதிந்துள்ளது.
இதற்கு உதாரணம் இக்கதை.
இறை பக்தியில் ஈடுபாடு கொண்ட பெண்மணி ஒருவர், ஒரு கிராமத்தில் இருந்தார். ஏழை குடும்பம் என்றாலும் அவரைவிட சிறந்த பக்திமானை அந்த ஊரிலேயே பார்க்க முடியாது, என்பார்கள். ஆனால் அவருக்கு வாழ்வில் ஏகப்பட்ட பிரச்னைகள் கணவர் உடல் நலம் இல்லாமல் படுத்த படுக்கையாகிவிட விவசாய கூலி வேலைக்கு போய் பிள்ளைகளுக்கு உணவளித்து வந்தார்.
இவ்வளவு பக்தியுடன் இருக்கும், நமக்கு பகவான் ஒரு வழிகாட்ட மாட்டாரா? என்று அவளுக்குள் ஏக்கம் இருந்தது. பக்கத்து ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதாக கேள்விப்பட்டு, அவரை காணச்சென்றாள். அவர் தன் குறைகளை சொல்வதற்கு முன்பே, 'நீ வருவாய் என்று பகவான் என்னிடம் சொன்னார்' என்றார் துறவி.
பிறகு அவளிடம் அழுக்கான ஒரு கோணிப்பை மூட்டையை கொடுத்தார் துறவி. இதை தலையில் தூக்கிக்கொண்டு வா நாம் உன் ஊர் வழியாகத்தான் பயணம் போகிறோம் என்று துறவி எழுந்து நடக்க தொடங்கினார்.
அந்தப் பெண்மணிக்கு கடும் அதிர்ச்சி!
ஏதாவது மந்திரம் சொல்லித்தருவார், பிரார்த்தனை செய்ய வழிகாட்டுவார்! என்று நினைத்து வந்தால் இப்படி அழுக்கு மூட்டை தருகிறாரே? என்று வேதனைபட்டாள். இருந்தாலும் மறுக்காமல் அந்த மூட்டையை தலையில் சுமந்தபடி நடக்க தொடங்கினாள்.
துறவியுடன் பெருங்கூட்டமே ஊர்வலமாக நடந்து வந்தது. மற்ற எல்லோரும் வெறுங்கையுடனும் அல்லது அதிக எடை இல்லாத நல்ல பைகளை எடுத்தபடியே வந்தனர். அவள் தலையில் மட்டும் தான் அழுக்கு மூட்டை இருந்தது. கூட்டத்தில் வழியிலும் எல்லாரும் தன்னையே கிண்டலாக பார்ப்பதுபோல அவளுக்கு தோன்றியது. மூட்டை அதிக சுமையாக இருந்ததாலும் கழுத்தும் வலித்தது.
'நம்மை மட்டும் ஏன் துறவி இந்த நிலைக்கு அழைத்துவிட்டாய் என்று உள்ளுக்குள் அவளுக்கு கோபம் வந்தது பகவானையும் மனசுக்குள் திட்டினாள்.
இந்த மூட்டையில் அப்படி என்னதான் இருக்கும் ?இந்த கேள்வியும் அவளுக்குள் எழுந்தது.
வலிக்கிறதா? என்று இடையில் ஒருமுறை கேட்ட துறவி, அதன்பின் அவர் பக்கமே திரும்பவில்லை. கூட்டத்திலும் யாரும் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை. கூட்டம் அந்த பெண்மணியின் ஊருக்குள் நுழைந்தபோது ஊர் மக்கள் எல்லோரும் அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.
ஊர்வலம் அந்தப் பெண்மணியின் வீட்டு அருகே வந்தபோது, துறவி நின்றார். இதுதானே உன் வீடு? என்று துறவி விசாரிக்க, உங்களுக்கு எப்படி தெரியும்? என்று பெண்மணி திகைப்புடன் கேட்டாள்.
இந்த மூட்டையையும் உனக்கே தரவேண்டும் என்பது பகவான் கட்டளை. ஏற்றுக்கொள்! என்று சொல்லிவிட்டு துறவி கூட்டத்துடன் திரும்பி நடக்க தொடங்கினார்.
தன் வீட்டுக்குள் அழுக்கு மூட்டை எடுத்து வந்து பிரித்து பார்த்தாள் அந்த பெண்மணி. வைக்கோல், கற்களுக்கு இடையே ஒரு பெரிய பையில் நிறைய பொற்காசுகள் இருந்தன.
'பெரிய பொக்கிஷத்தை எனக்கு கொடுத்தும் கூட இந்த அழுக்கு மூட்டையை பார்த்து, பகவானே உன்னைத் தவறாக நினைத்தேன். என்னை மன்னித்துவிடு! என்று பகவானிடம் மனப்பூர்வமாக வேண்டினாள் அவள்.
நமக்கும் கீழே இருப்பவர் கோடி!
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
வாழ்வில் எதையும் சுமை என்று நினைத்தாால் சுமை! பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம்!