
மனித வாழ்வில் பலவிதங்களில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்ற இறக்கங்கள் அவ்வப்போது பருவநிலை மாற்றம்போல நிகழ்வது சகஜம். அத்தனையும் கடந்துதான் வாழ்க்கை எனும் தேரை உறவு மற்றும் நட்பு வட்டங்களின் துணைகொண்டு இழுத்து வந்து ஒரு நிலைக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
அவ்வப்போது முட்கள் நிறைந்த பாதையிலும் கரடுமுரடான பாதையிலும் தொல்லை தராத பாதையிலும் பயணிக்கத்தான் வேண்டியுள்ளது. வாழ்க்கையானது சில தருணங்களில் முள்ளில் போட்ட சேலைபோல ஆகிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நமக்கு பக்குவமும், நிதானமும் தேவை.
நமது வாயிலிருந்து வரும் வாா்ததைகளும் நமக்கே எதிாியாவது உண்டல்லவா! ஒரு கண்ணாடிப்பொருள் உடைந்துவிடும் என நிதானமாக நாம் நமது பக்குவத்தைக் கடைபிடித்து அவசரப்படாமல் கையாள்வதுபோல நமது செயல்பாடு மற்றும் பேசுவதில் சொற்களை உபயோகப்படுத்துவதில் அடுத்தவர் மனது புண்பாடாதவாறு எதையும் எடுத்தேன், கவிழ்தேன், என செயல்பட்டு வாழ்ந்துவிட்டுப்போவது நல்லதல்ல.
சர்க்கரையாக இருக்கக்கூடாது. அதிக இனிப்பாகும்.
அதோபோல கசப்பாகவும் இருக்கக்கூடாது. கசந்துபோய்விடும் . பொதுவில் அளவான உப்பாக இருந்துவிடலாமே! அதில் ஒரு தவறும் இல்லையே!
ஒருவர் மனது புண்படும்படி பேசிவிட்டு, பின்னர் வருத்தம் தொிவிப்பதால் எந்த பயனும் வரப்போவதில்லை.
மாறாக யாாிடமும் எந்த நிலையிலும் எல்லை மீறாமல் அளவோடு பழகி அன்பான வாா்த்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழலாமே!
உறவுகள் வேண்டாம் என்றும் இருந்துவிட முடியாது. அதே நேரம் வேண்டும் எனவும் இருந்துவிட முடியாது.
சாப்பாட்டில் ஊறுகாய்போல தொட்டுக்கொள்வதும், தொட்டுக்கொள்ளாததுமான நிலைபோல வாழவேண்டும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பாா்கள். அதைவிட மேலானது நாம் கடைபிடிக்க வேண்டிய நிதானமே! வாழப்பிறந்துவிட்டோம் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.
நல்லதோ கெட்டதோ அனைத்து நபர்களிடத்திலும் மனசாட்சி கடைபிடித்து இறை சிந்தனை மற்றும் நல்ல எண்ணங்களோடு கொடுக்கல் வாங்கலில் நிதானம் கடைபிடித்து நெறிமுறை தவறாமல் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்வதே என்றைக்கும் நல்லது. அது நமக்கானது மட்டுமல்ல பொதுவாக அனைவருக்குமானதே!