

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் குருவின்றி உயரமுடியாது. ஒருவருக்கு நல்ல குரு அமைந்துவிட்டால் அவர் வாழ்க்கை சிறப்பாக அமையும். குருவருள் ஒருவருக்குத் திருவருள். நீரின்றி அமையாது உலகு என்பதுபோல குருவின்றி அமையாது வாழ்க்கை.
முதல் குருவாக அம்மா அமைகிறாள். அடுத்த குருவாக அப்பா வழிகாட்டி பலவற்றையும் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். பிறகு பள்ளிக்குச் சென்றதும் ஆசிரியர்கள் நம்மை வழிநடத்தி எதிர்கால வளமான வாழ்விற்காக கல்வியை போதிக்கிறார்கள். சிலர் ஆன்மிகத்தில் ஆழமாக ஈடுபட்டு தமக்குப் பிடித்தமான ஒரு குருவை ஏற்று அவரைப் பின்பற்றி வாழ்கிறார்கள். தொடர்ந்து இந்த உலகம் நமக்கு அன்றாடம் பலவிதமான பாடங்களைக் கற்றுத்தருகிறது.
எம்பெருமானார் உடையவர் இராமானுஜரின் சிஷ்யர்கள் முதலியாண்டான், கூரத்தாழ்வான் மற்றும் அனைவரும் தூய்மையான குருபக்தியில் திளைத்த பெருமை உடையவர்கள்.
ஒருசமயம் கூரத்தாழ்வான் தன் ஆச்சார்யன் இராமானுஜருக்காக பாலை சுண்டக் காய்ச்சி அதில் ஏலக்காய், கல்கண்டு முதலான பொருள்களைச் சேர்த்து பதமாக எடுத்துக் கொண்டு வருவதைக் கண்ட இராமானுஜர் அவரிடம் “பகவானுக்காக பால் கொண்டு வந்தாயோ?” என்று அரங்கனை மனதில் நினைத்து கூரத்தாழ்வானிடம் வினவினார்.
“ஸ்வாமி! இதை என்னுடைய பகவானுக்காக நான் எடுத்துக் கொண்டு வந்துள்ளேன்”
கூரத்தாழ்வானின் இந்த பதிலைக் கேட்ட இராமானுஜர் உள்ளம் நெகிழ்ந்தார்.
தனது ஆச்சார்யனான இராமானுஜனே தனது பகவான் என்பதை எவ்வளவு எளிமையாக வலிமையாக எடுத்துரைத்துள்ளார் பாருங்கள்.
நம் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமானால் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி தேவை. நம் வாழ்வில் நல்லவற்றைக் கற்றுத் தரும் ஒவ்வொருவரையும் நாம் குரு எனவும் கொள்ளலாம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நண்பன் வேண்டும். நாம் செய்யும் எல்லாவற்றையும் புகழ்ந்து நம்மை மகிழ்விக்காமல் நாம் செய்யும் நல்லதைப் பாராட்டவும் நாம் அவ்வப்போது அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளை எடுத்துரைத்து நம்மைத் திருத்தி வழிநடத்த நல்ல நண்பன் ஒருவன் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அப்போது நம் வாழ்க்கை சிறப்பான வழியில் ஒரு நதிபோல ஆனந்தமாகச் செல்லும். ஆக நல்ல நண்பனும் ஒரு குருவாகிறான்.
இந்த உலகில் யாரிடமும் ஏமாறாமல் வாழ்வது மிகவும் அவசியம். அப்படி ஏமாந்து போனால் வாழ்க்கை மிகவும் சிரமமாகிவிடும். நம் கஷ்டகாலம். சிலரிடம் நாம் ஏமாந்து போகவும் நேரிடுகிறது. அத்தகைய வேளைகளில் நம்மை ஏமாற்றுவோர் நமக்கு ஒரு குருவாக அமைந்து நமக்கு வாழ்க்கையில் எப்படி பிறரிடம் ஏமாறாமல் வாழவேண்டும் என்பதை போதிக்கிறார்கள். ஆக நம்மை ஏமாற்றுவோரும் ஒருவகையில் நமக்கு குருவாகிறார்கள்.
யாரை நம்பவேண்டும் யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் வாழ்க்கை அனுபவப் பாடங்களின் மூலமாக நமக்கு போதிக்கிறது. ஆன நம் வாழ்க்கையும் நமக்கு ஒரு குருவாக அமைந்து பல வாழ்க்கைப் பாடங்களை போதிக்கிறது.