

கற்பனை என்பது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். கற்பனை பண்ணித்தான் வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய அனைத்து விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் முன்பு மனிதனின் கற்பனையில் தோன்றியவைகள்தாம். குழந்தை பிறந்தவுடனே அந்தக்குழந்தையை வளர்த்து பெரியவனாக்கி டாக்டராக ஆக்கவேண்டும் என அந்தப் பெற்றோர்கள் கற்பனை காண்கின்றனர்.
கற்பனையில் பார்க்கும்போது படங்களாகத்தான் பார்க்க முடியும். ஆழ்மனத்தில் இலட்சியங்கள் பதிய வேண்டுமானால் படங்களாகத்தான் பதிய வைக்கவேண்டும். 'மல்லிகைப்பூ என்று நினைத்த மாத்திரத்தில் மல்லிகைப்பூ உங்களின் மனத்தில் படமாகத்தானே தெரிகிறது. எதை நினைத்தாலும் நடந்தவை அனைத்தும் முதலில் படங்களாகவே பதியப்படுகின்றன.
குழந்தைகளுக்கு எந்த ஒரு பொருளையும் படங்களாகக் காண்பிக்கும்போது அக்குழந்தைகளின் மனத்தில் உடனே அவை பதிந்துவிடுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கான புத்தகங்கள் யாவும் படங்களாகவே அச்சடிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையுமே கற்பனையில் படங்களாகப் பாருங்கள். நாம் அதைப் பெற்றுவிட்டதாகத் திடமாக நம்புங்கள். அனுபவியுங்கள், உணருங்கள். அவை எவ்விதத் தங்கு தடையுமின்றி ஆழ்மனத்தில் பதிந்துவிடும். பிறகு அவை மூளைக்கு அனுப்பப் படுகின்றன. மூளை அவை அனைத்தையும் உடலுக்கு உடனே தெரிவிக்கின்றன. உடல் அதற்குத் தகுந்தாற்போல் மாறத்தொடங்கிவிடும். காந்த சக்தி மேலிடும். சுறுசுறுப்பு ஏற்படும். வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் செயலுக்கு அவை பக்கத் துணையாக இருக்கும்.
இலட்சியத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தீர்களானால், இரண்டு அடி அவை உங்களை நோக்கி ஓடிவரும். கற்பனையில் இலட்சியத்தை அடைந்து அதை மனதார அனுபவித்து நம்பிக்கையுடன் செயலில் இறங்குவீர்களானால், உங்களுக்கும் உங்களின் இலட்சியத்திற்கும் இடைப்பட்ட தூரம் சில அடி தூரமே. இலட்சியத்தைக் கற்பனையில் பார்த்துக்கொண்டே அதை அடைந்து விட்டேன் என்ற எண்ணத்தைத் திரும்பத் திரும்ப உணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் எண்ணும்போது அந்த எண்ணமானது ஆழ்மனத்தில் பதிந்து அடுத்த வினாடியே உருவாக ஆரம்பிக்கிறது என்றே அனைத்து மனத்தத்துவ நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இலட்சியம் தன் கையில் விழவேண்டுமானால் செயலில் தீவிரம் காட்டவேண்டும். செயலின் அளவை வைத்தே இலட்சியங்களை அடையப்போகும் காலங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. 'என்னாலும் முடியும், என்னாலும் முடியும்' என்று ஒவ்வொரு நாளும் மார் தட்டுங்கள். தடங்கல்களை உடைத்தெறியுங்கள். செயலில் தீவிரம் காட்டுங்கள், நேர்மையான வழிகளில் உழையுங்கள். எண்ணமே அனைத் திற்கும் காரண கர்த்தா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம் எண்ணமே வாழ்வின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், வெற்றிக்கும், தோல்விக்கும், ஆரோக்கியத்திற்கும், நோய்க்கும் காரண கர்த்தா என்பதையும் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
இதன் அடிப்படையில்தான் நமது முன்னோர்கள் 'மனம் போல வாழ்வு' என்றார்கள்.
ஒருவன் நல்வாழ்வு வாழ விரும்பின் அவன் அல்லும் பகலும் அவ்வித வாழ்வைப் பற்றியே அமைதியான முறையில் எண்ண வேண்டும். கற்பனை பண்ண வேண்டும். கற்பனை பண்ணுவதில் கஞ்சத்தனம் வேண்டாம். கற்பனையாவும் உயர்ந்த இலட்சியங்களை அடைவதாக இருக்கட்டும்.