

நாம் பேசும் வார்த்தைகளுக்கு மிகுந்த சக்தி உண்டு. ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் ஆற்றல் வாய்ந்தவை. அவை நமது எண்ணங்களின் வெளிப்பாடு. பெரும்பாலும் வார்த்தைகளின் சக்தி பற்றி உணராமலேயே நாம் பேசுகிறோம். வார்த்தைகளின் அபரிமித சக்தியும் ஆற்றலும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒருவர் தினமும் பேசும் வார்த்தைகள் அவரது எண்ணங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. அவை அவரது உணர்ச்சிகள் மற்றும் மூளை செயல்பாட்டை கூட ஆழமாக வடிவமைக்கும். வலிந்து நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் நேர்மறையான வார்த்தைகள் மனநலம், அறிவாற்றல் செயல்திறன் ஆகியவற்றில் ஏராளமான நன்மைகளை உருவாக்குகிறது என்று அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.
நேர்மறையான வார்த்தைகளை பேசும்போது மூளையின் நியூரோ பிளாஸ்டிக் தன்மைக்கு நன்மை செய்கிறது. நமது மூளையை வாழ்நாள் முழுவதும் புதிய இணைப்புகள் மற்றும் பாதைகளை உருவாக்கும் திறன் கொண்டது. ஆதரவான, நம்பிக்கையான வார்த்தைகளை, உரையாடலை தொடர்ந்து பயிற்சி செய்து வரும்போது அது நம்பிக்கை, உந்துதல் மற்றும் மீள் தன்மை தொடர்பான நரம்பியல் சுற்றுகளை வலுப்படுத்துகிறது.
உடற்பயிற்சி செய்வது உடலின் தசைகளை உறுதியாக்குவது போல நேர்மறையான சுயபேச்சு ஒருவரது மூளையின் அமைப்பை மாற்றி அமைத்து பகுத்தறிவு சிந்தனைக்கு வழி வகுக்கிறது. டோபமைன் போன்ற நல்ல உணர்வு ஹார்மோன்கள் நரம்பியக் கடத்திகளை வெளியிடுகிறது. காலப்போக்கில் இந்த நரம்பியல் பாதைகள் ஆதிக்கம் மிக்கவைகளாக மாறி சவால்கள் மற்றும் பின்னடைவுகளில் நம்மை மிளிரச்செய்யும்.
ஏதாவது ஒரு செயலை செய்ய அஞ்சி, ‘நான் இதில் தோற்றுப்போவேன் என்று எண்ணி, அதை வார்த்தைகளாக சொல்லுவதற்கு பதிலாக ‘இந்த செயலில் நான் முழுக்க முழுக்க வெற்றி பெறுவேன்’ என்று கூறுவது நல்லது. அதைவிட “நான் செய்யப்போகும் இந்தக் காரியத்தில் வெற்றி பெற்று விட்டேன்’ என்று சொல்லுவது இன்னும் ஒருவரது சுயமரியாதையையும், மனதின் வலிமையையும், தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் ஊக்குவிக்கும்.
நேர்மறையாக தொடர்ந்து எண்ணுவதும் பேசுவதும் ஒருவரது முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கிறது. மன அழுத்தம் நீங்கி சிறந்த மனக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. சிக்கல் தீர்க்கும் திறனை வழங்குகிறது. உற்சாகமூட்டும் வார்த்தைகளை வழக்கமாக பயன்படுத்துபவர்கள் சவால்களில் இருந்து விரைவில் மீண்டு விடுவார்கள். நம்பிக்கையான கண்ணோட்டம் இருப்பதால் துன்பங்களைத் தாண்டி விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.
நேர்மறையான வார்த்தைகளை வார்த்தைகளை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திறம்பட சமாளிக்கும் உத்திகளை ஊக்குவிக்கிறது. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அபாயத்தை குறைக்கிறது. எதிர்மறை சிந்தனையை விலக்கி வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைக்கிறது.
ஒருவர் நேர்மறையாக சுயமாக பேசிக்கொள்ளும்போது குறுகிய காலத்தில் நல்ல மனநிலையை அளிப்பது மட்டுமில்லாமல், காலப்போக்கில் ஒருவரது சிந்தனை முறையையும் மாற்றுகிறது. சிறந்த மன ஆரோக்கியம், வலுவான உறவுகள், உயர்ந்த சாதனைகள் படைப்பதற்கும் ஆழ்ந்த நல்வாழ்க்கும் வடிவமைக்கிறது.
புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும்போது ‘எனக்கு குழப்பமாக இருக்கிறது’ என்று சொல்வதற்கு பதிலாக ‘நான் புதிய விஷயத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் திறம்படக் கற்றுக் கொள்வேன்’ என்று சொல்லலாம். ‘நான் அன்பானவன், எனது திறன்களை நான் மதிக்கிறேன்.
வளமான வாழ்வுக்கு நான் தகுதியானவன். எனது சாதனைகளை நான் மதிக்கிறேன், பாராட்டுகிறேன் என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளை ஒருவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும்போது அவருடைய வாழ்க்கையை வடிவமைக்கும் வார்த்தைகளாக அவை மாறும் என்பது நிச்சயம்.