

வாழ்க்கையில் எல்லோருக்கும் பலதரப்பட்ட பிரச்னைகள் இருக்கும். எல்லா பிரச்னைகளையும் கமாளித்து பிறகுதான் நாம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையமுடியும். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்றவாறும் பிரச்னைகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். சில நேரங்களில் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே நாம் தவித்துக்கொண்டிருப்போம். பிரச்னைகள் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேறி கடந்து செல்வதற்கு உண்டான வழியும் தெரியாமல் தவிப்போம்.
பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், அதற்கு பிறகு அலுவலகம் என வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு விதமான பிரச்னைகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். சில இடங்களில் நாமே தனக்குத்தானே சமாளித்து விடுவோம். ஒரு சில நேரங்களில் நமக்கு ஐடியாவும் வராது, வழியும் தெரியாது. அப்படியே பாதியிலேயே நின்று விடுவோம்.
அப்படிப்பட்ட தருணங்களில், நமக்கு நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ, பெற்றோர்களோ, தெந்தவர்களோ, ஆசிரியர்களோ, யாராவது நமக்கு கண்டிப்பாக உதவி புரிந்திருப்பார்கள். அவர்களின் உதவியால் நாம் சவால்களையும் பிரச்னைகளையும் கடந்து வந்திருப்போம்.
அவ்வாறு கடந்து வந்த பின், ஒரு சில பேர், சில வருடங்கள் கழித்து தமக்கு உதவி செய்தவர்களை மறந்து விடுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் கூட கண்டும் காணாததுபோல் சென்றுவிடுவார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும். நம் முன்னேற்றத்திற்கு உதவி செய்தவர்களை நாம் ஒரு போதும் மறக்க கூடாது.
அதை போல நம்மிடம் யாராவது வந்து அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்காகவோ அல்லது பிரச்னைக்கான வழிகளை அறிந்து கொள்வதற்காகவோ நாடும்போது நாம் கண்டிப்பாக நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்ய வேண்டும்.
என்னால் முடியாது, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அவர்களை புறக்கணிக்க கூடாது. ஒரு காலத்தில் நமக்கு பிரச்னை வந்தபோது நமக்காக யாரோ ஒருவர் உதவி புரிந்ததால் தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம்,ஒருவேளை யாருமே உதவி புரியாமலோ அல்லது ஆலோசனை கூறாமலோ இருந்திருந்தால் இன்று நம் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை எப்போதும் நினைத்து பார்க்க வேண்டும்.
ஆகவே நமக்கு உதவி புரிந்தவர்களை மறப்பதும் தவறு, உதவி கேட்பவர்களை உதவி செய்யாமல் நிராகரிப்பதும் தவறு. இந்த இரண்டு தவறையும் செய்யாமல் இருந்தீர்களே ஆனால் வாழ்க்கையில் நீங்களும் முன்னேறலாம், அடுத்தவர்களையும் முன்னேற வைக்கலாம்.