

'கரிய மேகத்திலும் வெள்ளி கோடுகள் இருக்கும் 'என்பது ஓர் ஆங்கில வாசகம். ஆகவே எந்த தீமை வந்தாலும் அதிலும் நன்மைக்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. நமக்கு சாதகம் இல்லாத விஷயங்களையும் சாதகமான கோணத்தில் இருந்து பார்க்க கற்றுக் கொண்டால் புதிய வழிகள் தானாகவே பிறக்கும்.
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதில் மூழ்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு பெரிய பாதிப்பும் உணர்ச்சி புயலை நம்மிடம் ஏற்படுத்துவது உண்மை என்றாலும், இந்த புயலின் திசையை நாம் விரும்பினால் நமக்கு சாதகமான பக்கமாக திருப்ப முடியும்.
பழங்காலத்தில் மாலுமிகள் கடலில் பிரயாணம் செய்யும்போது திசை காட்டும் கருவிகள் இல்லை. இரவு நேரங்களில் வானத்தில் தென்பட்ட நட்சத்திரங்களை வழிகாட்டியாக கொண்டு, இலக்கை நோக்கி பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்யக்கூடிய கடல் வழிகளையும் கண்டுபிடித்தார்கள்.
கடலில் பயணம் செய்கின்றபோது இருள் ஒரு பாதகமான விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை; என்றாலும் அந்த பாதகத்தையே சாதகமாக்கி கொண்டு மின்னுகின்ற நட்சத்திரங்களை வழிகாட்டியாக அவர்களால் ஆக்கிக்கொள்ள முடிந்தது. ஆகவே வாழ்க்கையில் ஏற்படுகின்ற சோதனைகளை நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இருளை மட்டும் பார்க்காமல் இருளில் தெரிகின்ற நட்சத்திரங்களை பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அலெக்சாண்டர் டூமாஸ் என்கிற புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், 'காதலிலும் சோகத்திலும்தான் பெரிய இலக்கியங்கள் பிறக்கின்றன' என்றார்.
காதல், சோகம் ஆகிய இரண்டுமே மிகவும் ஆழமான உணர்ச்சிகளாக மாறி, அதுவும் சோகம் மனிதனை கடுமையான சோதனைக்கு உள்ளாக்குகிறது. இதன் காரணமாக அழுத்தமான, ஆழமான அனுபவங்கள் அவனிடம் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கின்றன.
சிறைக்குள் இருந்த காலத்தில்தான் பண்டித ஜவஹர்லால் நேரு சிறந்த புத்தகங்களை எழுதி முடித்தார். ஆபிரகாம் லிங்கன் மிக மோசமான மனசோர்வினால் பாதிக்கப்பட்ட காலத்தில்தான் பெரிய லட்சியங்களை உருவாக்கிக்கொண்டார்.
உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற சோதனை என்கிற இருள் புதிய வெளிச்சத்தை உங்களுக்கு தரப்போகிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுமானால், வாழ்க்கையில் தோன்றுகின்ற கஷ்டங்கள் துச்சமாகிவிடும். சோதனைகள் இருளாக இருந்தாலும் அந்த இருளிலும் வெளிச்சத்தை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இருளுக்கு மத்தியில் வெளிச்சம் இருப்பதை நாம்தான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இருளில் நட்சத்திரங்கள் பிரகாசிப்பது போல் வாழ்க்கை இருளிலும் எத்தனையோ நட்சத்திரங்கள் பிரகாசிக்கத் தான் செய்கின்றன. அவற்றை நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சோதனைகளையும் சாதனைகளாக்கலாம்.
வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தவே சோதனைகள் வந்திருக்கின்றன என நம்பினாலே அதை வென்று விடுவீர்கள். ஆகவே தீமையிலும் நன்மையைக் கண்டு நலம் பெறுங்கள்.