

புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே பாக்கி. டைரி எழுதணும். ஜிம் போய் 50கிலோ தாஜ்மஹால் ஆகணும். சுந்தர பவனம் நாவலை படிக்கோணும்... இப்படி புத்தாண்டு சபத லிஸ்ட் சீனச்சுவராய் நீண்டாலும், சபதத்தை நிறைவேற்ற இம்மியளவு கூட அசைய மாட்டோம் என்பது விளங்காத உண்மை.
அதைவிடுங்க. 2026ம் வருடம், "என்னால் முடியும்"ன்னு சொல்ல ஆரம்பியுங்கள். மீண்டும், மீண்டும் சொல்ல மனதில் படிந்து, பின் செயலாகி, நிச்சயம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வரும் வருடம் வளமாக இருக்கும்.
புது விஷயங்களை கற்றுக்கொள்ள என்னால் முடியும். ஆமாம். பக்கா பனீர் தயாரித்து, குருமா பண்ணுவேன்.
ஜஸ்ட் மிஸ்ஸாகி, தவறாகிவிட்டால், நிதானமாய் இருக்க என்னால் முடியும். பால் பொங்கிவிட்டால், பொறுமையாக, ஸ்டவ்வை துடைத்து சுத்தம் செய்வேன்.
தெரியாத விஷயங்களை ஈகோ இல்லாமல் கேட்டு தெரிந்துகொள்ள என்னால் முடியும். டூருக்கு தயாரிக்கும் புளியோதரையில், புளிப்பு கூடிவிட்டால், சரி செய்ய, மாமியாரை போனில் அழைப்பேன்.
காத்திருக்க என்னால் முடியும். சாலட் செய்ய ஊறவைத்த பச்சைப் பயிறு கூடுதல் ருசிக்காக முளைக்கட்டும் வரை காத்திருப்பேன்.
தோல்விகளை தாங்கிக்கொள்ள என்னால் முடியும். முதல் நாள் இரவு உறைக்குத்திய பால், தயிராகாமல் இருந்தால், பதற்றப்படாமல் பகோளாபாத் செய்து விடுவேன்.
மீண்டும், மீண்டும் முயலவும் என்னால் முடியும். சப்பாத்திகள் வட்டமாக வரும் வரை தேய்ப்பேன். தேய்ப்பேன்... தேய்ச்சுக்கிட்டே இருப்பேன்.
தெரியாத விஷயங்களை எனக்குத் தெரியாதுன்னு கெத்தாக சொல்ல, என்னால் முடியும். ஆம். எனக்கு அல்வாவை இறக்கும் பதம் தெரியாதுன்னு கூலா சொல்லிடுவேன்.
பாராட்டு கிடைக்காத போதும், கொள்கையிலிருந்து விலகாமல் உறுதியாக நிற்க என்னால் முடியும். கஷ்டப்பட்டு செய்த மஸ்ரூம் பிரியாணியை யாருமே பாராட்டாவிட்டாலும், மெனு லிஸ்ட்டில் இருந்து பிரியாணி டெலிட் ஆகாது.
பிறர் குறை சொல்லும்போதும், பேசாதிருக்க என்னால் முடியும். ஆலு ப்ரையில் கண்ணீர் வருமளவு காரம் என்று சொன்னால், அமைதியாக ஒரு கிண்ணத்தில் தயிர்விட்டு, தட்டின் முன் வைத்து விடுவேன்.
இயலாத காரியங்களை முடியாது என தைரியமாக சொல்ல என்னால் முடியும். கால் வலியில் அவதிப்படும்போது, குழந்தைகள் தோசை கேட்டால், இட்லி வார்த்து விடுவேன்.
அவசியமான நேரங்களில் மற்றவர்களின் உதவியை நாட என்னால் முடியும். திடீர் விருந்தினர் வரும் செய்தி வந்ததும், தூரத்தில் இருக்கும் ஓர்ப்படியை, டூவீலரில் அழைத்து வந்து, விருந்தோம்பல் முடிந்ததும் மறுபடி வீட்டில் கொண்டுபோய் விடுவேன்.
தேவை ஏற்படின் பிறருக்கு உதவ என்னால் முடியும். பக்கத்து வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி விருந்தாளி விஜயம் செய்தால், நான் வைத்த குழம்பை கொடுத்துவிட்டு, லெமன் ரைஸ் ரெடி பண்ணி விடுவேன்.
முக்கியமாக மன்னிப்பு கேட்க என்னால் முடியும். உப்புமாவில் உப்பு மிஸ்ஸிங் எரிச்சலுடன் கமெண்ட் வரும்போது, ஸாரி… மறந்துட்டேன்னு சொல்லி கோபத்தை மெல்ட் ஆக்கிருவேன்.
இஷ்டமோ, கஷ்டமோ ரசிக்க என்னால் முடியும்.
சர்க்கரை இல்லாத காபியையும், அதன் கசப்பை ருசித்துக் குடிப்பேன்.
களைப்பில்லாமல் கடமைகளை செய்ய என்னால் முடியும். தினசரி மூணு வேளையும், ஆன்லைனில் ஆர்டர் பண்ணாமல் வீட்டிலேயே சாப்பாடு தயார் செய்வேன்.
சமையலறையில் மட்டுமல்ல… எல்லா இடங்களிலும் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும். அப்புறமென்ன… இன்னிக்கே, இப்பவே சொல்ல ஆரம்பியுங்கள் "என்னால் முடியும்"... ஆல் தி பெஸ்ட்..!