
மாற்றங்களே இன்றி வாழ்க்கை சலித்துவிட்டதாக நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா. உங்கள் அலுவலகத்தை மாற்றினால், குடியிருப்பை மாற்றினால், குடும்பத்தை மாற்றினால் என்ன என்றெல்லாம் தோன்றும். இது முடிவில்லாத பிரச்னை ஆகிவிடும். உண்மையில் மாற்றமில்லாமல் எதுவும் இயங்கவில்லை. நேற்று பார்த்த சூரியன் இன்று மாறுபட்டுதான் தெரிகிறது. சென்ற வருடமோ, சென்ற நொடியோ அதை உங்கள் அனுபவத்தில் உணரமுடியாது.
உத்சாகமோ, சலிப்போ எதுவானாலும் அது மனதின் உருவாக்கம்தான். நேற்று என்பது நினைவு. நேற்று மேகங்கள் எங்கெங்கே இருந்தன என்பதை பதிவு செய்து வைத்துக்கொள்ளவில்லை.
பிரபஞ்சத்தில் எங்கு பார்த்தாலும் நிகழ்வுகள் தடயங்களை பதிவு செய்துவிட்டுப் போகிறதே தவிர நினைவுகளாக சுமையாகி அழுத்துவதில்லை. ஒரு பாறை கூட அதற்குறிய அதிர்வுகளை வெளிப்படுத்தி தன்னை கணத்துக்கு கணம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
ஒருவர் குல்லா விற்றுக்கொண்டிருந்தார். களைத்து வெயிலால் படுத்துவிட்டான் அவர். விழித்தபோது அவரது தொப்பிகளை குரங்குகள் தலையில் அணிந்து மரத்தில் உட்கார்ந்திருந்தன. நம் பழைய பாட்டி கதையில் வருவதுபோல் இந்த தொப்பி விற்பவர் தன் குல்லாயை கழட்டி தரையில் எறிய குரங்குகளும் அப்படியே செய்யும் என நினைத்தார்.
ஆனால் ஒரு குரங்கு அந்த குல்லாய் விற்பவர் தூக்கி எறிந்த குல்லாயையும் தூக்கிக்கொண்டு போய்விட்டது. அது அவனிடம் "முட்டாளே உனக்கு மட்டும்தான் தாத்தா பாட்டி இருப்பாரா?" என்று கேட்டது.
குரங்குகளின் பார்வை கூட புதிதாக மாறிவிட்டது. நீங்கள் மாறவில்லையா. நீங்கள் வாழும் பூமி கூட நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது. உங்கள் மனதிற்கு வேறுவிதமாக செயலாற்றத் தெரியாததால் சலிப்பு ஏற்படுகிறது. சலிப்பிலிருந்து விழிபட வழி உள்ளது. எதைச் செய்தாலும் அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும்.
செய்வதை சந்தோஷமாகச் செய்தால் மட்டுமே உங்களால் முழுமையாக செயலாற்ற முடியும். கட்டாயத்திற்காக வேலை செய்தால் ரத்தக்கொதிப்பும், இதய வலியும்தான் வரும்.
உங்கள் உடலும் மனமும் உங்களை ஆள்வதிலிருந்து விடுபட்டு, நீங்கள் அவற்றைப் பயன்படுத்தி விரும்பிய இடத்துக்குப் போகவேண்டும். வெளியில் எது மாறினாலும், எத்தனை மாறினாலும் அது மாற்றமாயிராது. வாழ்க்கையை விழிப்புணர்வுடன் வாழ்ந்து பார்த்தால், ஒவ்வொரு தருணமும் உயிர்ப்போடு இருப்பீர்கள். ஒரு தருணம் கூட பழையதாக இருக்காது. உங்கள் சலிப்பும் பறந்துபோகும்.