
தன்னம்பிக்கை மிக்கவர்கள் எப்போதும் தனித்துத் தெரிவார்கள். அவர்களுக்கென்று சில விசேஷ குணங்கள் உண்டு அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தன்னை மதித்தல்;
தன்னம்பிக்கை உள்ளவர்களின் முதன்மையான குணம் தன்னை மதித்தல். தன்னுடைய பலம் மற்றும் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை கூர் திட்டி வெற்றியடைவார்கள். அதேபோல தன்னுடைய குறைகளையும் கண்டறிந்து அவற்றையும் மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்பார்கள்.
2. தெளிவும் அமைதியும் கலந்த பேச்சு;
தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் புத்திசாலிகள். எப்போதும் அமைதியான உறுதியான குரலில் பேசுவார்கள். அது அவர்களது எண்ணங்களைத் திறம்பட வெளிப்படுத்த உதவுகிறது. புரிந்து கொள்ள எளிதான வகையில் தெளிவாக தங்கள் கருத்துக்களை விளக்குவார்கள். தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அமைதியான குரலில் பேசும்போது கேட்பவர்களுக்கு நம்பிக்கையையும் மரியாதையையும் வளர்க்கும். அதே போல பிறரிடம் பேசும்போது அவருடைய கண்களைப் பார்த்து பேசுவார்கள்.
3. தெரியாது என்று தைரியமாக சொல்லுதல்
அதிக தன்னம்பிக்கை மிகுந்த நபர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில்லை. தெரியாதவற்றை ஒப்புக் கொள்வதன் மூலம் தங்கள் அறிவார்ந்த மனத்தாழ்மையை வெளிப்படுத்துகிறார்கள். சில விஷயங்களை தெரிந்தது போல நடிப்பதை விட நேர்மையுடன் தெரியாது என்று சொல்வது சிறந்தது என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த தெரியாத விஷயத்தை கற்றுக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
4. ரிஸ்க் எடுத்தல்;
நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் நிறைந்த நபர்கள் ஆபத்துகளைச் சந்திக்க பயப்படுவதில்லை. தங்கள் முயற்சிகளில் இருக்கும் சிக்கல்களையும் சிரமங்களையும் உணர்ந்தாலும் அவற்றை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். தங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ரிஸ்க் எடுப்பது அவசியம் என்பதை நன்றாக அறிந்து அவற்றை எதிர்கொள்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்கிறார்கள்.
5. தவறுகளில் இருந்து பாடம்;
தங்கள் தவறுகள் மற்றும் தோல்விகளை பலகீனமாக அவர்கள் கருதுவதில்லை. தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். தோற்கும்போது அதைப் பற்றிய அவமான உணர்ச்சி அடைவதில்லை. தங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் இருந்து பின் வாங்குவதும் இல்லை.
6. பிறரின் கருத்துக்களை பற்றி கவலைப்படுவதில்லை;
தன்னம்பிக்கையும் புத்திசாலித்தனமும் நிறைந்த நபர்கள் பிறருடைய கருத்துக்களை மதித்தாலும், தன்னை பற்றி பிறர் கூறும் எதிர்மறையான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதையும் எல்லோரும் அவர்களுடன் உடன்படமாட்டார்கள் என்பதையும் அவர்கள் நன்றாக புரிந்துகொள்கிறார்கள்.
7. நன்றி உணர்வு;
இவர்கள் பெரும்பாலும் நன்றி உணர்வு மிக்கவர்கள். தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய நல்ல விஷயங்களையும் மனிதர்களையும் நன்றி பாராட்டத் தவறுவதில்லை. தங்களுடைய சாதனைகள் மற்றும் அனுபவங்களுக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த நேர்மறைக்கண்ணோட்டம் அவர்களுக்கு நிறைவையும் மகிழ்ச்சியும் தருகிறது. அதனால் அவருடைய நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் அதிகரிக்கிறது.
8. பிறரைக் கொண்டாடுதல்;
நம்பிக்கை உள்ள நபர்கள் பிறர் வெற்றியடையும்போது அதை பற்றி அச்சம் அல்லது பொறாமை கொள்வதில்லை. மாறாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகள் உண்டு என்பதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். இதன் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்கி இணக்கமான உறவுகளை உருவாக்குகிறார்கள்.
9. தாழ்மையுள்ளவர்கள்;
தன்னம்பிக்கையும் புத்திசாலித்தனமும் இருந்த போதும் இவர்கள் எப்போதும் தாழ்மையுடன் இருக்கிறார்கள். தங்களுடைய திறமைகளையும் அறிவையும் பற்றி ஆணவமோ அகங்காரமோ அடைவதில்லை. மாறாக மிகவும் தாழ்மை உணர்ச்சியுடன் இருக்கிறார்கள். இதனாலே அவர்களது கற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. வாழ்வில் மென்மேலும் வளர்கிறார்கள்.