
அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவார்கள். பிறர் மீது அன்புடையவர்களோ தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் சுயநலமின்றி பிறருக்கென எண்ணி வாழ்வார்கள். மனித உறவுகள் காலம் காலமாக தொடர்ந்து வருவதற்கு காரணம் அன்பு, பொறுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற அருங்குணங்களே. உறவுக்குள் பிரச்னைகள் ஏற்படும் பொழுது இருவரில் யாரேனும் ஒருவர் அன்பின் காரணமாக பொறுமை காப்பதும், விட்டுக் கொடுப்பது என இருப்பதால் அந்த உறவு அறுந்து போகாமல் நீடிக்கிறது.
உயிரும் உடலும்போல அன்பும், மன்னிக்கும் மனப்பான்மையும் இணைந்து இருப்பதே சிறந்தது. அன்பு என்பது பிறரிடம் உண்மையான நேசத்தையும், பற்றையும் கொள்ளச் செய்யும். மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் சொல்தான் அன்பு. மற்றவர் மேல் அக்கறையும், தன்னலமற்ற விசுவாசமும் கொண்ட மனநிலைதான் அன்பு என்பது. எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி நிபந்தனையற்ற அன்பு கொள்வது என்பது நம்மையும், நம்மைச்சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியுடன் இருக்கவைக்கும்.
அன்பு என்பது உறவுகளை மீட்டெடுக்கவும், வாழ்வில் சந்தோஷத்தையும், அமைதியை கொண்டு வரவும் தேவைப்படும் முக்கியமான ஒன்று. நம்மைச் சுற்றி உள்ளவர்களுடன் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்க அன்பும் மன்னிக்கும் மனப்பான்மையும் மிகவும் அவசியம். பிறர் மீது கொள்ளும் அன்பு எந்தவிதமான மன கசப்புகளையும், வெறுப்புகளையும் நம்மிடம் அண்ட விடாது.
நமக்கு தீங்கு செய்த ஒருவர் மீது கோபம், கசப்பு உணர்வு மற்றும் வெறுப்புணர்வை வளர்த்துக்கொள்ளாமல் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் உறவு பலப்படுவதுடன் நம் மனமும் சந்தோஷத்தில் அமைதிபெறும். மன்னித்தல் என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல. அது ஒரு வலிமையான தைரியத்தின் செயலாகும்.
பிறரை காயப்படுத்தாமல் இருப்பதற்கும், நாம் காயப்படாமல் இருக்கவும் இந்த மன்னிக்கும் மனப்பான்மை மிகவும் அவசியம். நாம் ஒருவரை அவர்கள் செய்த தவறுக்காக மன்னிக்கும்போது நம் மனதிலிருந்து காழ்ப்புணர்ச்சி விலகி விடுகிறது.
உலகெங்கிலும் நிலவும் அமைதியின்மைக்கு காரணம் அன்பு இல்லாமையே. நாம் அன்பு வைத்திருக்கும் ஒருவருக்கு தீங்கு செய்வோமா? ஒரு வேளை தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்தாலும் மன்னித்து விடுவது சிறந்த பண்பல்லவா. மன்னிக்கும் மனப்பான்மை இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவுகள் வராது. ஆகவே எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் அன்பு இல்லாமையே.
உற்றார், உறவினர், நண்பர்கள், அயலார் என எங்கும் அன்பு செலுத்தி வாழவே மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நமக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையும், மனதிலே கொண்டிருக்கிற அழுக்குகளின் காரணமாகவும் நம்மால் பிறரிடம் எளிதில் அன்பு செலுத்த முடிவதில்லை. அன்பு செலுத்த தோன்றாத இடத்தில் மன்னிக்கவும் தோன்றாது. அன்பும் மன்னிக்கும் மனப்பான்மையும் வாழ்வில் தேவையான இன்றிமையாத விஷயங்களாகும்.
அன்பை வேண்டாம் என்று கூறுபவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. கொடுக்க கொடுக்க திகட்டாததும், அள்ள அள்ள குறையாததும் உண்மையான அன்பு மட்டுமே. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செலுத்தும் அன்பு பிறரையும், ஏன் நம்மையும் கூட ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.
அதே போல்தான் மன்னிக்கும் குணமும். மன்னிப்பு என்பது நாம் மற்றவர்களை பெருந்தன்மையுடன் மன்னிக்கும் செயல் மட்டுமில்லை. நமக்காக நாம் கொடுத்துக் கொள்வதும் தான். இல்லையென்றால் வன்மம், கோபம், வெறுப்பு போன்ற எண்ணங்கள் நம் மனதில் குடிகொண்டு விடும். எனவே மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.