
உங்களுக்கு இருக்கும் திறமையையும் ஆர்வத்தையும் முதலில் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலையும் ஆர்வத்தையும் வெளிக்கொணர்ந்து அவை உங்கள் வெற்றிக்கு உதவும் வகையில் மாற்றுங்கள். பயன்படாத திறமைகளால் உங்களுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ அதில் இயற்கையாகவே உங்களுக்கு ஆர்வம் ஏற்படும்.
நீங்கள் விரும்பும் வெற்றியை அடைவதற்கு உங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்காட்டி, நீங்கள் தகுதியானவர் என்பதை ஒவ்வொரு கணமும் நிரூபிக்க வேண்டும். அதற்குத் தக்கவாறு உங்கள் மனநிலை அமையவேண்டும்.
உங்களுக்கு விருப்பமில்லாத பணியைச் செய்யும்படி நீங்கள் பணிக்கப்பட்டிருக்கலாம் அல்லது நீங்கள் நேசித்த பணி உங்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்.
அதற்காக உங்களுக்குக் கிடைத்திருக்கும் அந்தப் பணிமீது கசப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு செயல்பாடு இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு பொருளும் ஒரு நோக்கத்திற்காகப் பயன்படுகிறது.
உதாரணமாக, தண்ணீரைப் பருகினால் தாகம் தீரவேண்டும்.
மருந்தை உட்கொண்டால் நோய் தீரவேண்டும்.
விளக்கு எரிந்தால் இருள் விலகவேண்டும்.
அதுபோல, நீங்கள் செய்கிற வேலையில் உங்கள் திறமை வெளிப்பட வேண்டும். உங்கள் கைவண்ணம் அதிலே தெரிய வேண்டும்.
நீங்கள் பணியிலிருப்பது பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தான் பிரச்சனையை உருவாக்க அல்ல என்பது தெளிவாகும் விதத்தில் உங்கள் செயல்பாடு அமையவேண்டும்.
நீங்கள் வகித்துவரும் பதவியைச் சிறப்பாகச் செய்வதற்கு என்னென்ன திறமைகள் வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாகச் சிந்தித்து அவற்றைப் பட்டியலிடுங்கள்.
பிறகு உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான திறமைகளையும் உங்களுக்குள்ள திறமைகளையும் ஒப்பீடு செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் என்னென்ன திறமைகளை வளர்க்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்.
தற்போதுள்ள அறிவையும் திறமையையும் வைத்துக் கொண்டு செழுமையான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் வகிக்கும் பதவிக்கும் அதற்கு மேலே உள்ள பதவிக்கும் தேவையான திறமைகளையும் (Skills) அறிவையும் (Knowledge) வளர்த்துக்கொள்ள ஓர் செயல் திட்டத்தை (Action Plan) உருவாக்குங்கள்.
ஒருவருடைய பணி அவருடைய திறமைகளின் புகைப்படம் எனக் கூறுவார்கள். அதாவது பணி மூலமே உங்கள் திறமை, ஆற்றல், நற்பண்புகள் ஆகியன வெளிஉலகிற்கு தெரிகின்றன என்பதால் திறமையை நேசித்து அதனை வளர்க்க கற்றுகொண்டு வாழ்வில் முன்னேற்றம் பெறுவோம்.