
வாழ்க்கையில் வெற்றி பெற இந்த மூன்றும் எப்போதும் நம் கூடவே இருக்க வேண்டும் அப்போதுதான் வெற்றி என்கிற பழம் கிடைத்து கொண்டே இருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? இதோ விளக்கமாக கூறுகிறேன், கேளுங்கள்....
நேர் மறை எண்ணங்கள் + முயற்சி + ஆரோக்கியம் = வெற்றி!
இந்த ஃபார்முலாவை கடிகாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாமா... கடிகாரத்தில் சின்ன முள், பெரிய முள் மற்றும் எப்போதும் நிற்காமல் சுற்றி கொண்டேஇருக்கும் விநாடி முள் என மூன்று முட்கள் இருக்கின்றன. சின்னமுள்ளானது மணிக் கணக்கையும் பெரிய முள்ளானது நிமிட கணக்கையும் குறிக்கிறது. சரி, இப்போது ஃபார்முலாவின் விவரத்தை பார்ப்போம்.
இதில் வெற்றி என்பது சின்னமுள்ளை அதாவது மணிக்கணக்கை (hours) குறிக்கும்.
முயற்சி என்பது பெரிய முள்ளை அதாவது நிமிடக் கணக்கை குறிக்கும்.
நேர்மறை எண்ணங்கள் என்பது விநாடி முள்ளை குறிக்கும்.
இந்த விநாடி முள்ளானது ஓடிக்கொண்டே இருக்கும். நிற்கவே நிற்காது. இது 60 சுற்று சுற்றி முடிக்கும் போதுதான் நிமிட முள்ளில் ஒரு நிமிடம் கூடும். விநாடி முள் 3600 முறை சுற்றினால்தான் நிமிட முள்ளில் 60 நிமிடங்கள் கூடி மணி முள்ளில் ஒரு மணி அதாவது one hour ஆகும். அப்படி என்றால் ஒரு மணி நேரத்தை எட்ட விநாடி முள்ளானது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், மேலும் அது ஓட ஓட நிமிட முள்ளானது மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கும்.
கடைசியாகதான் மணி முள் ஒரு வழியாக நகரும். சரி இதில் இன்னும் ஒருவரின் முக்கிய பங்கை பற்றி சொல்லவில்லையே, அதாவது ஆரோக்கியம். கடிகாரம் ஒடுவதில் ஆரோக்கியம் என்பது battery-ஐ குறிக்கிறது. அவ்வப்போது battery-ஐ சரி வர மாற்றினால்தானே கடிகாரம் ஓடும். மேலும் கடிகாரம் நிற்க தடைபடாமல் விநாடி முள்ளானது டிக் டிக் என்று ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே அந்த கடிகாரம் சரியாக இயங்குவாக அர்த்தம்.
இப்போது இந்த ஃபார்முலாவை எப்படி நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்?
விநாடி முள்ளாகிய நேர்மறை எண்ணங்கள் மட்டும் நம் மனதில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் முயற்சி என்கிற நிமிட முள் மெது மெதுவாக நகர ஆரம்பிக்கும். நேர்மறை எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் போது முயற்சியையும் மெதுவாக செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும். மேலும் கடிகாரம் ஓட எப்படி battery அவசியமோ அதைப் போல வெற்றிக்கும் ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியத்தை பேணுவது மிக மிக அவசியம்.
இந்த ஃபார்முலாவின் விதிப்படி விநாடி முள்ளாகிய நேர்மறை எண்ணங்களும் ஒரு போதும் நிற்க கூடாது. உங்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியமும் நேர்மறை எண்ணங்களும் இரண்டு கண்களை போல் பாவிக்க பட வேண்டும். இவை இரண்டுமே எப்போதும் உங்களிடமிருந்தால்தான் நீங்கள் சரியாக செயல்பட முடியும். ஒரு தரவை வெற்றி கிடைத்து விட்டதென்று அத்தோடு நிறுத்தாமல் மேலும் மேலும் கடிகாரத்தை போல் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த ஃபார்முலாவின் விளக்கம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன். இந்த ஃபார்முலாவை முயற்சி செய்து பாருங்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!