
பதினேழு வயதுப் பையன், கோடீஸ் வரனாகிவிட்டான். இப்படி ஒருவர் சொன்னால் உங்களுக்குச் சட்டென்று என்ன தோன்றும்?
அந்தப் பையன் ஒரு பணக்காரக் குடும்பத்துப்பிள்ளை, பாட்டன் பூட்டன் சொத்து முழுவதுமோ. ஒரு பகுதியோ அவனுக்கு வந்திருக்கிறது, அதனால் கோடீஸ்வரனாகிவிட்டான். அவ்வளவு தானே?
ப்ளஸ் டூ படிக்கிற வயதில் ஒரு பையன் வேறு எந்த விதத்திலும் கோடீஸ்வரனாக முடியாது என்றுதான் நாம் எண்ணுவோம்.
நிக் என்ற ஒரு சிறுவன் அவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கித் தந்தார்கள். எல்லாரையும்போல் அதில் படம் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் என்றுதான் தொடங்கினான், பின்னர் சாஃப்ட்வேர் ப்ரொகிராம் எழுதக் கற்றுக்கொண்டான்.
பதினைந்து வயதில் 'ட்ரிம்மிட்' என்ற ஒரு சாஃப்ட்வேரை எழுதி வெளியிட்டான் நிக். அதைப் பயன்படுத்திப் பார்த்த சிலர் 'பிரமாதம்' என்றார்கள், பலர் 'திராபை' என்றார்கள்.
'பிரமாதம்' என்று புகழ்ந்தவர்களை நிக் கண்டு கொள்ளவில்லை. 'திராபை' என்று விமர்சித்தவர்களைக் கூர்ந்து கவனித்தான். தன்னுடைய சாஃப்ட்வேரில் என்ன பிரச்னை, ஏன் அவர்கள் அதைத் திட்டுகிறார்கள் என்று யோசித்தான், அதில் இருந்த குறைகளைப் போக்கி முழுவதுமாக மாற்றி அமைத்து இன்னோர் அருமையான சாஃப்ட்வேரை எழுதி முடித்தான். அதற்கு 'சம்லி' என்று பெயர் சூட்டினான்.
'ட்ரிம்மிட்' உடன் ஒப்பிடும்போது 'சம்லி' சூப்பர் டூப்பர் ஹிட் இணையத்தில் பலரும் அதைப் பயன்படுத்திப் பாராட்டினார்கள். பெரிய நிறுவனங்கள் நிக்கைக் கவனிக்க ஆரம்பித்தன.
புகழ் பெற்ற 'யாஹூ' நிறுவனம் சமீபத்தில் நிக்கைத் தொடர்பு கொண்டது. அவனுடைய 'சம்லி' சாஃட்வேரை வாங்க விரும்புவதாகத் தெரிவித்தது. விலை, சுமார் 30 மில்லியன் டாலர்கள், நம் ஊர் மதிப்பில் நூற்றைம்பது கோடி ரூபாய்!
நிக்குக்கு இப்போது வயது பதினேழுதான், பள்ளியில் படித்தபடி சும்மா ஓய்வு நேரத்தில் ஜாலியாக எழுதிய ஒரு சாஃப்ட்வேர். இரண்டே வருடத்துக்குள் அவனைப் பெரிய கோடீஸ்வரனாக்கி விட்டது.
அதுமட்டுமில்லை, இணையம் சார்ந்த தொழில்நுட்ப உலகில் நிக் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டான். அவன் அடுத்து எழுதப்போகும் சாஃப்ட்வேர் என்னவாக இருக்கும் என்று இப்போதே ஆரூடங்கள் தொடங்கிவிட்டன, இந்தப் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.
பள்ளி, கல்லூரி, வேலை என்பது ஒரு பாதை என்றால், இதுபோன்ற பகுதி நேரத் தொழில் முயற்சிகளும், பிடித்த செயல்களும் முழு நேரமாக வளர்ச்சி பெறுவதும் இன்னொரு பாதை, அதை தேர்ந்தெடுக்கிறவர்களைத் திட்டித் தீர்த்துத் தரதரவென்று வழக்கமான பாதைக்கு இழுத்துவராமல் ஊக்கப்படுத்தினால் மிகப்பெரிய சாதனையாளர்கள் ஆவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.