
ஒரு மனிதன் என்பவரே அவனது எண்ணங்களின் தொகுப்புதான். அவனுடைய எண்ணங்கள்தான் அவனை உயர்வடைய வைக்கிறது. அவன் வீழ்ச்சிக்கும் அவன் எண்ணங்களே காரணம். இப்படி எல்லாமே மனிதர்களுடைய எண்ணங்களாக இருக்கிறபடியால் மனித எண்ணங்களுடன் எண்ணங்கள் பெரிய பெரிய போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த பூமியில் மாடுகள், ஆடுகள், நாய்கள், சிங்கம், புலி மற்றும் பறவைகளும் அந்தந்த இயல்பிற்குத் தக்கவாறு ஒரே குணத்தைதான் கொண்டிருக்கும். ஆனால் மனிதர்கள் நிலை அப்படியல்ல. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உள்ளனரோ அத்தனை, கோடி மனப் போக்குகள் உண்டு.
மனிதன் அவரவர் எண்ணப்படி வலுத்தவன், சளைத்தவனாக்கப்படுகிறான். ஒங்கியவன் கை எஜமான், தலைவன் எனும் நிலையும், பின்வாங்கி இறங்கி இருக்கிறவன் இயற்கை அடிமை, தொண்டன் என்ற நிலையும் ஆக உருவாகி இருக்கின்றது. ஏமாற்றுகின்றவர்கள் ஏமாற்றுகின்றனர்.
ஏமாற்றப்படுபவர்களாகவும் ஏமாறுகின்றவர் களாகவும் துயரப்படுகிறவர்களாகவும் இப்படியே பல நிலையில் இருக்கிறார்கள். ஒரு தனிமனிதனின் வாழ்க்கை அவனுடைய எண்ண ஓட்டத்திற்கேற்றார் போல் அமையும்.
அதேபோல் ஒரு குடும்பத் தலைவன் எண்ண ஓட்டத்திற் கேற்ப குடும்பம் அமையும். அதேபோல ஒரு தலைவன் வழிநடத்தலுக்கேற்ப அரசாட்சி அமையும். இந்த நிலையில் ஒத்துப்போக முடியாமலும், ஒதுங்கிப்போக முடியாமலும், போராடியும்,போராடாமலும் தவிக்கின்ற, தவிர்க்கின்ற நிலைகளும் உருவாகும். அதற்குக் காரணம் அவரவர் மனநிலையும், எண்ண ஓட்டமும் தான். இதுவெல்லாம் இறைவன் போட்டவிதி அல்ல. இறைவன் விட்ட வழியும் அல்ல. எல்லாமே மனித எண்ணத்தின் விளைவுதான் காரணம்.
எனவே அது மனித விதிதான். இந்த விதியை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் மனித எண்ணத்தின் ஓட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அப்படி அவன் மாற்றி அமைக்கும்போது, புதிய விதியை உருவாக்குகிறவனாகிறான்.
எந்த அளவிற்கு உங்களுடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு சூழ்நிலைகளும் மாற்றம் காண்கின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளைத் தருகின்றன. தீயவை தீய கனிகளையே தருகின்றன. நல்லவற்றுக்கும், தீயவற்றுக்கும் நம் எண்ணங்களே பொறுப்பு.