
சில விஷயங்கள் எனக்கு வசதியாகவே இல்லை என்று பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் வாழ்க்கை எப்போது சில வசதிகளுக்காக தேவைகள் உங்கள் மனதிலிருந்து நீங்கும் போதுதான். "ஒரு காலத்தில் விஷமாக இருந்தது இன்னொரு காலத்தில் அமுதம். ஒரு காலத்தில் அமுதமாக இருந்தது இன்னொரு காலத்தில் விஷம்" என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மை. விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும்வரை வாழ்க்கை போராட்டமாக மாகத்தான் இருக்கும்.
வாழ்க்கையை அதன் தன்மையோடு ஏற்றுக் கொள்ளும்போது வசதிக் குறைவு என்பதே வராது. மாறாக ஆனந்தம்தான் நிலைத்து நிற்கும். ஆனந்தம் என்றாலே அது உச்சநிலைதான். மகிழ்ச்சியை நீங்கள் விலைகொடுத்து வாங்கலாம். ஆனால் அது நீண்டகாலம் நீடிக்காது. உதாரணத்துக்கு சைக்கிள் வைத்திருப்பவன் கார் வாங்கினால் மகிழ்ச்சி. அது தொந்திரவே தரத்தொடங்கினால் அதுவே துன்பமாகிவிடுகிறது.
ஆனால் ஆனந்தம் என்பது நம் உள்ளிலிருந்து ஏற்படுவது. ஒரு மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருப்பானேயானால் சராசரி இன்ப துன்பங்கள் அவனை பாதிப்பதில்லை. ஒரு மரணம் நிகழ்கிறதென்றால் அதற்காக வருத்திக்கொண்டே அவனால் ஆனந்தமாகவும் இருக்க முடியும். அவனுடைய அடிப்படைத் தன்மையாகிற ஆனந்தத்தை யாராலும், எந்த சம்பவத்தாலும் மாற்றமுடியாது.
சில விஷயங்களை நாம் வேண்டும், வேண்டாம் என்கிறபோதே சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. அந்த எதிர்பார்ப்புகள் அகந்தை காரணமாக எழுகின்றன. அதை நீங்கள் அறிவு என்ற நெருப்பு கொண்டு எரித்துவிட முடியும். அகந்தை என்ற கயறு எரிக்கப்படாத வரையில் அது உங்களை வாழ்வில் கட்டிப் போடுகிறது.
ஒரு முட்டாள் அமைதியாக இருப்பான். முற்றும் உணர்ந்த ஞானியும் அமைதியாக இருப்பார். இருவர் அமைதியும் ஒன்றல்ல. ஒரு முட்டாள் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருப்பான். ஞானியோ வெறுமனே விவாதிப்பதால் பயனில்லை என்று அமைதியாக இருக்கிறார். ஒரு மனிதன் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து அமைதியாக இருப்பார் என்றால் அவர் இரைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர்.
உங்கள் கருத்து சரியென்று தெரிந்துவிட்டால் வாழ்க்கை முழுக்க விவாதித்துக் கொண்டு இருக்கத்தான் தோன்றும். ஆனால் உங்கள் உள்ளுணர்வுக்குச் சரியென்றுபட்டாலே போதும் அதை உலகுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
விருப்பு வெறுப்பால் ஏற்படுகின்ற தீமை என்னவென்றால் உங்கள் கண்ணோட்டங்களுக்கேற்ப இந்த உலகம் முழுவதையும் வளைப்பதற்கு வாழ்க்கை முழுவதும் முயற்சிப்பீர்கள். விருப்பு வெறுப்பின் அடிப்படையில் உலகத்தை பார்க்கிறபோது உங்களால் வாழ்க்கையை முழுமையாக நுகர முடியாது. விருப்பு வெறுப்புகளைக் கடந்து வருகிறவர் வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுபவரல்ல. வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுபவர்.