

பழி வாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே பழிவாங்கலின் பின்னால் இருக்கும் உணர்வுகளாகும். நம்முடைய எண்ணத்தில் ஏற்படும் அபிப்பிராய பேதமே மற்றவர்களை தப்பாக எண்ண வைக்கிறது; புரிந்துகொள்ள வைக்கிறது. பழிவாங்கும் குணம் மனித இயல்பில் இருந்தாலும் இது நல்லொழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிரானது.
பழிவாங்கும் உணர்வு என்பது நமக்கு தீங்கு செய்தவர்களை திரும்ப பதிலுக்கு தீமை செய்யவேண்டும் என்ற ஆழமான, இயல்பான மனித உணர்வாகும். இது கோபத்தின் வெளிப்பாடாகவும், பழிவாங்கும் ஆசையாகவும் வெளிப்படுகிறது. ஆனால் இவை பெரும்பாலும் குற்ற உணர்ச்சிக்கும், மன அமைதியின்மைக்கும் வழி வகுக்கும். எனவே அவற்றை தியானம், நல்லொழுக்கம் மற்றும் மனக்கட்டுப்பாடு மூலம் நிர்வகிப்பது அவசியம்.
பழிவாங்கலை நாம் சற்று உன்னிப்பாக கவனித்தோமானால் சில உண்மைகள் புரியும். நாம் நம்மைவிட பலவீனமானவர்களை மட்டுமே பழிவாங்க முயற்சிக்கிறோம். நம்மைவிட வலிமையானவர்கள் முன்பு நாம் பலவீனமாகி விடுகிறோம். பழிவாங்க பயப்படுகிறோம்; தயங்குகிறோம். வலிமையானவர் களைப் பழி வாங்கினால் ஏற்படும் பின் விளைவுகளை எண்ணி, அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று ஒதுங்கி விடுகிறோம்.
ஒருவர் மீது வெறுப்பு ஏற்படும்பொழுது அல்லது பழிவாங்க துடிக்கும் பொழுது அடக்க முடியாத கோபமும், பழிவாங்கும் வெறியும் ஏற்பட்டு நம் உடலிலும், மனதிலும் நிறைய வேண்டத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தம், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி போன்றவை உண்டாவதுடன் நம் மனநிலையும் கெடும். இதனால் நம்முடைய செயல்திறன் குறைந்து, பொன்னான காலத்தையும் வாழ்வையும் வீணாக்கிக் கொள்வோம். அத்துடன் பழிவாங்குவதால் நம்முடைய உறவுகளும் பாதிக்கும். பழிவாங்க நினைப்பது என்பது நம்முடைய தகுதியில் இருந்து கீழிறங்கும் செயலாகும்.
பழிவாங்கும் குணம் நம் மன அமைதியை குலைத்துவிடும். சமூக விரோதப் போக்குகளை வளர்த்துவிடும். மனச்சிதைவுக்கு வழிவகுக்கும். பழிவாங்கும் குணம் தற்காலிக மகிழ்ச்சியைத் தந்தாலும் நீண்ட காலத்திற்கு துன்பத்தையே விளைவிக்கும். மேலும் பழிக்கு பழி வாங்குவதால் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த பழி வாங்கும் குணம் ஒருபோதும் நல்ல விளைவுகளைத் தராது. அது நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பெருமளவில் பாதிக்கும். எனவே பொறுமையை கடைப்பிடித்து, மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருப்பதன் மூலம் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுபட்டு மனஅமைதியுடன் வாழலாம்.
பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம். பழிவாங்குதல் என்பது அற்பர்கள் காணும் அற்ப சந்தோஷம். அதற்கு பதிலாக அலட்சியம் கொள்வதே சிறந்தது.