
நாகரீகம் என்ற சொல் ஒரு சமூகத்தின் மேம்பட்ட நிலை, பண்பாடு, நடத்தை, வாழ்க்கைமுறை ஆகியவற்றை குறிக்கிறது. ஆனால் இந்த பெயரால் செய்யக்கூடிய தவறுகள் பெருகி வருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் பிறரின் கலாச்சாரத்தை மதிக்காமல் இருப்பதும் அவமதிப்பதும் தவறு. ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கென்று கலாச்சாரம் உள்ளது. அது கட்டாயம் மதிக்கப்பட வேண்டியது அவசியம். கேலியோ கிண்டலோ அவமதிப்போ அவசியமற்றது.
சமுதாயத்தில் நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உணவு, உடை, பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் நாகரீகம் என்ற போர்வையில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. சமுதாயத்தில் இவை தவிர்க்க முடியாதவை என்றாலும் நாகரீகம் என்ற போர்வையில் ஆபாசமாக ஆடை அணிவதும், ஆடம்பர செலவு செய்து தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்பதும் கண்டிக்கத்தக்கதுதான்.
காலம் மாற மாற கோலங்களும் காட்சிகளும் மாறத்தான் செய்யும் என்றாலும் EMI கலாச்சாரமும், கையில் சிறிதும் சேமிப்பு இல்லாமல் கடனில் பொருட்கள், வாகனங்கள் வாங்குவதும், கடன் அட்டைகளை பயன்படுத்துவதும் என ஆடம்பர செலவுகளும், பழக்கங்களும் நம்மை நாகரீகம் என்ற போர்வையில் படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டு இருக்கின்றன.
நாகரீகம் என்பது அன்பு, அமைதி, நல்லிணக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து வன்முறையை நியாயப்படுத்துவதோ ஊக்குவிப்பதோ ஆபத்தானது. நாகரீகம் என்ற பெயரில் தவறான புரிதல்களை உருவாக்காமல் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம். பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் ஆகியவை சமூகத்தின் முக்கியமான அம்சங்கள். உண்ணும் உணவில் தொடங்கி உடுக்கும் உடைகள், நடந்து கொள்ளும் முறைகள் ஆகியவற்றில் நாகரீகம் என்ற பெயரில் சறுக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கலாச்சாரங்களில் சின்ன சின்ன மாற்றங்கள் பெறுவது இயற்கைதான். அதை தடுத்தால் சமூகம் தேங்கிவிடும். முன்னேற்றங்கள் எதுவும் உண்டாகாது. ஆனால் நாகரீகம் என்ற பெயரில் பண்பாடு, கலாச்சார சிதைவுகளுக்கு உட்படாமல் வாழவேண்டியது மிகவும் அவசியம். அறம் பேணுவதும், விருந்தோம்பலும் நம்மைவிட்டு வெகு தூரம் சென்று விட்டது. பாலியல் குற்றங்கள் பெருகுவதும், அதை சாதாரணமாக கடந்து செல்வதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, ஓரினச்சேர்க்கை இவை எல்லாம் கலாச்சார சிதைவுகள்.
நாகரீகம் என்ற போர்வையில் நம்முடைய அடையாளங்களை எல்லாம் தொலைத்துவிட்டு தவறான பாதையில் செல்வது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும்தான். பிறந்த குழந்தைக்கு இதுவரை யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்றெண்ணி, அர்த்தம் தெரியாமல் நாகரீகம் என்ற பெயரில் வாயில் நுழையாத பெயர்களை வைப்பதும், கேட்டால் எங்களது உரிமை என்று போர்க்கொடி உயர்த்துவதும் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள தேவையற்ற மாற்றங்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் நாகரீகம் என்ற பெயரில் நம்முடைய இயல்பை இழந்து வருகிறோம். பிறருக்காக நடித்துக் கொண்டிருக்கிறோம். நாகரீகம் என்ற பெயரில் தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்.