
பணம் மட்டுமே முக்கியம் என்று பலர் நினைத்து அதை பெற அல்லும் பகலும் அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பணம் வாழ்க்கைக்கு தேவை தான் ஆனால் அது மட்டுமே பிரதானமல்ல.
பணம் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு இந்த இரு கதைகள் ஒரு செய்தியை உங்களுக்கு உணர்த்தும்..
லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூட்டில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது. அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை.
பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சில சமயம் பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.
ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவுதான்..! கடைசிவரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்… கத்தினார்… யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல... அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர்.
பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார். மரணிக்கும் முன் தன் விரலைக் காயப்படுத்தி சுவரில் எழுதினார் இப்படி: "உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறார்". சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருநாள் உலகைப் பிரிந்தே ஆகவேண்டும். ஆயினும், எங்கே..? எப்போது..? எப்படி..? என்பது மட்டும் தெரிவது இல்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது. உல்லாசப் பயணம் சென்றால் திரும்பலாம்.. உலகைப் பிரிந்தால் திரும்ப முடியுமா..? எனவே, யாரையும் வெறுக்காமல், யாரையும் ஒடுக்காமல், யாரையும் காயப்படுத்தாமல், யாரையும் கேவலப்படுத்தாமல், நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கருதாமல் வாழுங்கள். முடிந்த மட்டும் பிறருக்கு உதவுங்கள்.
நிலையான அமைதி, குறைவிலாத நிறைவு, வற்றாத ஆனந்தத்தை தனக்குள் தேடிக் கண்டு கொள்வதே வாழ்வின் தலையாய குறிக்கோள்.-என்கிறார் - பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள்.
ஏமாற்றி சொத்துச் சேர்க்கலாம், ஆனால் அதை அனுபவிக்க ஏமாற்றி ஆயுளை அதிகரிக்க முடியாது.
எதுவும் இல்லாமல் பிறந்து, எல்லாம் வேண்டும் என அலைந்து, எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து, உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து .. இந்த உலகை விட்டு ஒரு நாள் பறந்து செல்வதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் நிமிர்ந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள். உடலால் மட்டுமல்ல, மனதாலும் தவறு என தெரிந்தால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.. உங்கள் குழந்தைகளுக்கு பகைமையை ஊட்டாதீர்கள்.
எதையுமே புரிந்துகொள்ளாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைப்பது. துயர்களைக் கண்டு துவண்டால் நல்வழிகள் பிறப்பதில்லை. வாழ்வில் வெற்றியும், தோல்வியும் இருபடிகளே ஒன்றில் உங்களை உணர்ந்து கொள்ளுங்கள் மற்றொன்றில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பெயர் சொல்லும் படி வாழ்வதுதான் வாழ்க்கை.