

நம் வாழ்க்கையில் நல்லவர்களை கண்டாலும், பண்பில் சிறந்தவர்களை கண்டாலும் அகம் மட்டுமன்றி, முகமும் மலர்ந்து வரவேற்று உபசரிப்போம். அவர்களது நட்பை விரும்பும் விதமாக அவர்களோடு உரையாடுவோம்.
நண்பர்கள் வெளிவட்டார பழக்கங்களில் நமக்கு பெருந்துணையாக இருப்பார்கள். மேலும் துன்பம் வந்த காலத்தில் துன்பத்தை இறக்கிவைக்க செய்து ஆறுதல் அளிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
எத்தகைய சூழ்நிலையிலும் வேறுபாடு இல்லாமல் இயன்ற போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையே நட்பிற்கு சிறந்த நிலையாகும்.
ஒருவனை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக அவனுடைய நண்பர்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பது முன்னோர்கள் கூற்றாக உள்ளது. நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஒழுக்கம் உள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதைத்தான் இப்படி அழகுபட நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
நம்முடைய பண்புக்கேற்றவர்களை நல்ல நண்பர்களாக தேடிப் பெற வேண்டியது நமக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கு நாம் செய்யும் பெரும் தொண்டு ஆகும்.
ஏனெனில் ஒவ்வொருவரும் நல்ல நண்பர்களை பண்பாளர்களை தேர்வு செய்யும் போது, ஒட்டுமொத்தமாக சமுதாயத்தில் பெரும்பாலானோர் பண்பாளர்களாகவே உருவாக்கப்பட்டு விடுவதால் நாமும் உயர்வதோடு சமுதாயமும் உயர்கிறது.
பணத்திற்காக மட்டும் பழகும் நட்பு நீடித்த நாள் நிலைக்காது. பண்பு, ஒழுக்கம் மற்றும் குறிக்கோளுக்காகவே நன்மை தரும் நட்பை பெறுவதோடு, சொல்லாலும் செயலாலும் சுத்தமாய் நடப்பவர் நட்பையேப் பெறவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் நல்ல நண்பர்கள் கூட இடையிலேயே கெட்டு விடுகின்றனர். அப்படி இருக்கும்போது சாதாரண மானவர்கள் எப்படி கெடாமல் இருக்க முடியும் என்ற கேள்வி கூட எழலாம் .ஆனால் நம் முன்னால் வைக்கப்பட்டுள்ள இத்தனை சோதனைகளையும் வென்று நம்முடைய சாதனைகளாக படைக்க வேண்டும்.
தீயவர்களை கூட ஒதுக்கிவிடாமல் குறைகளை இனிமையாக சுட்டிக்காட்டி திருத்துவது சமுதாய மாற்றத்திற்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் நாம் செய்யும் பங்களிப்பாக இருக்கும்.
என்றாவது ஒருநாள் அத்தகையவன் திருந்தினால் நம்மை வாழ்த்துவதோடு, அவன் பெற்றோர், மனைவி, மக்கள் உட்பட அனைவருமே நம்மை வாழ்த்துவர். இதனால் நம் வாழ்வு நிச்சயம் உயர்ந்த நிலையை அடையும்.
நண்பனுக்கு நாம் செய்யும் உதவியோ அல்லது நமக்கு துன்பம் வரும்போது நண்பன் செய்யும் உதவியோ தியாக மனப்பான்மையோடு இருக்கவேண்டும். நட்பின் கவசமே தியாகம் எனலாம்.
அத்தகைய கவசம் நம்முடைய வாழ்வில் உயர்வைத்தான் தேடித் தருமே தவிர தாழ்வை தேடித்தராது. எனவே நாம் ஒவ்வொருவரும் நல்ல நண்பர்களை பெற்று நாடு போற்ற வாழ்வது நமது கடமையாகக் கொள்ளவேண்டும்.