
வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற ஆர்வம் பெரும் பாலானோருக்கு இருக்கிறது. மற்றவர் புகழவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசை கிட்டத்தட்ட அனைவருக்குமே உண்டு. வசதியுடன் பெருமையோடு வாழத்தான் அனைவருக்குமே விருப்பம். ஒரு சிலருக்கு வேண்டுமானால் இந்த வாழ்க்கை நிலையை எப்படிச் சாதித்துக் கொள்வது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், பெரும்பாலோருக்கு இந்த வழிமுறை தெரியும். என்ன செய்தால், நாம் முன்னேற முடியும் என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவர். ஒன்று சுயமாக அறிந்திருப்பார்கள். அல்லது மற்றவரைப் பார்த்து தெரிந்து கொண்டிருப்பார்கள்.
முன்னேற வேண்டும் என்கிற ஆசை பலருக்கு இருக்க, என்ன செய்தால் முன்னேற முடியும் என்பதும் தெரிந்திருக்க, அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அவர்கள் அப்படிச் செய்ய முற்படுவது இல்லை. இருக்கும் நிலையிலேயே இருந்துவிடுகிறார்கள். விடை தெரிந்திருந்தும் ஏன் இவர்கள் முனைவ தில்லை? ஏன் இந்தத் தயக்கம்? இந்தத் தயக்கத்தினால் மிகப் பொன்னான வாய்ப்புகளை நழுவ விட்டுவிடுகிறார்களே அது ஏன்? பொய்யான பல காரணங்களைக் கூறி, தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முற்படுகிறார்களே,
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு விருப்பம் (Wish) அவசியம் வேண்டும். ஆனால், விருப்பத்திற்கும் (Wishes) விளைவிற்கும் (Effect) நடுவே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. செயல்பாடு (Activity) என்ற ஒரு பாலம்தான் இவற்றை இணைக்கிறது. தகுந்த செயல்பாட்டினால் மாத்திரமே தகுந்த விளைவை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படி இருக்கச் செயல்பாட்டில் ஈடுபடாமலேயே விளைவை எதிர்பார்ப்பது வீணானது. அரைகுறை மனதோடு விடுபட்டாலும் விளைவு நாம் விரும்பும் வண்ணம் அமையாது.
இந்த உலகத்தில் தராசுச் சட்டம் (Law of Scales) என்ற ஒன்றை ஆண்டவன் விதித்திருக்கிறான். எப்படி தராசில் ஒரு தட்டில் எவ்வளவு எடை வைக்கின்றோமோ, அதற்கு ஈடாகத்தான் மற்ற தட்டில் நிற்குமோ, அதுபோல நாம் எந்த அளவிற்கு உழைக்கின்றோமோ அந்த அளவிற்குத்தான் விளைவுகளையும் எதிர்பார்க்க முடியும்.
நாம் எந்த அளவிற்கு உழைக்கிறோமோ, அந்த அளவிற்குத்தான் நமக்கு ஊதியம் கிட்டும். அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதனால் செயல்பாட்டில் முனையாமலேயே விளைவுகளை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். முயற்சி செய்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டு போகிறவர்கள் என்றுமே இலக்கை அடையமுடியாது. 'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா' என்றார் பட்டுக்கோட்டை. இந்தத் தள்ளிப்போடுதல் (Procrastination) ஒரு கொடிய நோய் கேன்சர்போல மனிதனைக் கொன்றேபோடும்.
நாம் செவ்வனே உழைத்தால், நாம் செல்வத்தைத்தேடி அலைய வேண்டியது இல்லை. செல்வம் நம் முகவரி விசாரித்துக் கொண்டு நம்மைத் தேடித்தானே வரும். விருப்பத்திற்கும். விளைவுகளுக்கும் இடையேயிருக்கும் இடைவெளியை, செயல்பாடு என்கிற பாலத்தால் மாத்திரமே தாண்ட முடியும்.