
ஆசைப்படுவது குறைந்தால் ஆனந்தம் அதிகமாகும். நிறைவேற்ற முடியாத ஆசைகள் இருந்தால் துன்பத்திற்கு காரணமாக அமையும். பெரிய ஆசைகளை நிறைவேற்றுவது கடினம். மேலும் அந்த ஆசை நிறைவேறும் வரை மகிழ்ச்சியும் இருக்காது. பெரிய ஆசையை நிறைவேற்றுவதற்காக நம்மில் பலர் சிறிய சிறிய சந்தோஷங்களை இழக்கிறோம். அதனால்தான் சின்ன சின்னதாக ஆசைப்பட வேண்டும். நம் சக்திக்கு உட்பட்டு ஆசைகள் இருக்கவேண்டும் என்கிறார்கள்.
நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து வருத்தப்படுவதை விட நம்மிடம் எது இருக்கிறதோ அதற்காக சந்தோஷப்படுவது தான் வாழ்க்கைக்கு நல்லது. அதனால் பெரிதாக ஆசைப்படுவதை விட்டுவிட்டு சின்ன சின்னதாக ஆசைப்பட்டால் அவற்றை நிறைவேற்றுவதும் எளிது;
வாழ்க்கையும் மகிழ்ச்சியாக நகரும். வாழ்க்கையின் குறிக்கோள் சந்தோஷமாக இருப்பதுதான். சந்தோஷமாக இருப்பதற்கு பல்வேறு வகையான ஆசைகள் நிறைவேற வேண்டும். பெரிதாக ஆசைப்பட்டால் அவை நிறைவேறுவது கடினம். அந்த ஆசைகள் நிறைவேறும் வரை சந்தோஷமும் கிடைக்காது.
பெரிய பெரிய ஆசைகளுக்கு பதிலாக சின்ன சின்ன சந்தோஷங்களை, ஆசைகளை வளர்த்துக் கொண்டால், பெரிய ஆசைக்காக சின்ன சந்தோஷங்களை தியாகம் செய்ய வேண்டி இருக்காது. நம்முடைய லட்சியம் பெரிதாக இருக்கலாம். ஆனால் அதை அடையும் வழியில் சின்ன சின்ன ஆசைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆசைகள் பூர்த்தி அடையும் போது சந்தோஷம் உண்டாகும். சிறிய வெற்றிகளை அடைவதும், அதைக் கொண்டாடுவதும் அடுத்தடுத்த பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
அதிக செலவு வைக்கும் ஆசைகள், நிதி பிரச்னைகளை உருவாக்கலாம். புகழ் அல்லது வெற்றி பெறும் ஆசை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம் மனஅமைதியை இழக்கச் செய்யலாம். எனவே யதார்த்தமான இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் அடையமுடியும். ஒருவருக்கு எல்லாமும் எப்போதும் கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் மனம் சந்தோஷம் அடைவதில்லை.
தன்னிடம் இல்லாத ஒன்றைத்தேடி ஏமாற்றம் அடையும். அதனால் மகிழ்ச்சி ஒரே இடத்தில் நிற்பதில்லை என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். எனவே நம்மிடம் எது இருக்கிறதோ அதை உயர்வாகவும், சந்தோஷமாகவும் நினைத்து வாழப் பழகவேண்டும் அதுதான் நமக்கு நீடித்த சந்தோஷத்தைத்தரும்.
ஆசைகளை குறைத்துக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் அடையலாம். இதற்கு தேவை மற்றும் விருப்பங்களுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். அவசியமான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து, ஆடம்பரமான விருப்பங்களை தவிர்ப்பது அவசியம்.
நம்மிடம் உள்ளவற்றில் திருப்தி அடைவது, மேலும் அதிகமாகத் தேடுவதைக் குறைக்கும். சுயநலம்தான் ஆசையின் மூல காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, சுயநலத்தை குறைத்துக் கொண்டு சமூகத்திற்காக சேவை செய்வதில் ஈடுபடுவது தேவையற்ற ஆசைகளை குறைக்கும் வழியாகும்.
ஆசையே துன்பத்திற்கு காரணம். நாம் ஆசைப்படுவது நமக்கு கிடைக்காதபொழுது அல்லது நம் ஆசை நிறைவேறாத பொழுது மனம் அதிருப்தி அடைந்து துன்பத்தில் மூழ்குகிறது. எனவே அளவோடு ஆசைப்பட்டு வளமோடு வாழ்வோம்!