
நச்சரிப்பு குணம் என்பது, தொடர்ச்சியாக கோரிக்கை வைப்பது, குறை கூறுவது அல்லது தொந்தரவு செய்வதன் மூலம் மற்றவர்களை விரக்தியடையச் செய்யும் ஒரு நடத்தையாகும். எப்பொழுதும் ஏதாவது புகார் அளித்துக்கொண்டே இருப்பது, தவறுகளைக் கண்டறிவது, அதையே திரும்பத் திரும்ப சொல்லி நம்மை எரிச்சல் அடையவைப்பது போன்றவை உறவை சீர்குலைக்கும் தன்மை கொண்டது.
இத்தகைய நச்சரிக்கும் பண்பை கொண்டவர்களை கையாள்வது என்பது மிகவும் கடினமான செயலாகும். நச்சரிப்பது ஒருவருக்கு அதிருப்தியையும், விரக்தியையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உறவுகளை பாதிக்கும். தம்பதிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நச்சரிப்பு அதிகரித்தால் உறவில் விரிசல் ஏற்படும்.
ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி அல்லது ஒரு வேலையை செய்யும்படி தொடர்ந்து வற்புறுத்துவது, அதை எதிர்கொள்பவர் களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சதா சர்வகாலமும் பிறரின் தவறுகளை அல்லது குறைகளைக் கண்டறிந்து அவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒரு விஷயம் முக்கியமாக தோன்றலாம்; ஆனால் மற்றவருக்கு அப்படி இல்லாமல் போகும்போது நச்சரிப்பு ஏற்படலாம்.
இந்த நச்சரிப்பு குணத்தால் உறவுகள் சிதையக்கூடும். பெற்றோர்கள் குழந்தைகளைத் தொடர்ந்து நச்சரிக்கும் பொழுது அது குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குறைத்து, அவர்களின் வளர்ச்சிக்கு தடையாகக்கூட இருக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட கோரிக்கை அல்லது புகார் மீண்டும் மீண்டும் கூறப்படும் பொழுது அது நச்சரிப்பாக கருதப்படுகிறது. நச்சரிப்பு என்பது, அவர்கள் கூறுவதை செய்து முடிக்கும் வரை விடாமல் நச்சரித்து காரியம் சாதித்துக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இன்னும் சிலருக்கோ ஏதாவது குறை கூறிக்கொண்டே இருக்கும் பழக்கம் இருக்கும். இந்த நச்சரிப்பு குணத்தால் பிறர் எரிச்சல் அடைவது தெரிந்தாலும் இவர்களால் அந்த குணத்தை மாற்றிக் கொள்ள முடியாது.
இப்படிப்பட்ட நச்சரிக்கும் குணம் கொண்டவர்களை கையாள்வதற்கு முதலில் நம் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் செயல்களால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்பதை முதலில் தெளிவாக அவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
அடுத்ததாக அவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பது நமக்கு நன்மை அளிக்கும். அவர்களின் இந்த நச்சரிப்பு குணத்தால் நாம் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம் என்பதை இது தெரியப்படுத்த உதவும். அத்துடன் நம் மனஅழுத்தத்தை கையாள்வதற்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடவும், சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இந்த செயல்முறையின்போது நம் மனநிலையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். பிறரது நச்சரிப்பு குணத்தால் நம் மனம் அழுத்தம் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
சில சமயங்களில் நச்சரிப்பு குணம் கொண்டவர்கள் மிகவும் கவலை பட்டாலோ அல்லது பயந்தாலோ கூட இப்படி நடந்து கொள்ளலாம். அவர்களின் நடத்தையின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது சிக்கலை தீர்ப்பதற்கு வழி வகுக்கும்.
அத்துடன் அவர்களின் இந்த செயலால் நம் மனம் எவ்வளவு வருத்தப்படுகிறது அல்லது வேதனைப்படுகிறது என்பதை எடுத்துச் செல்லி புரிய வைக்கலாம். எதற்கும் மசியவில்லை என்றால் நீங்கள் நச்சரிப்பது எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. இனி இம்மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் என்று நேரடியாக சொல்லிவிடலாம்.