
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். நல்லதும் கெட்டதும் மாறி மாறி வருகின்றன. அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப, ஏற்ற இறக்கமான வாழ்க்கை அமைவது சகஜம்.
ஆனால் நடைமுறை வாழ்வில் சில நிகழ்வுகளை நாம் கடந்து போகவேண்டும். சில விஷயங்களை புாிந்து கொண்டு அதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் நாம் கடைபிடித்து வரும், அல்லது கடைபிடிக்காத பல விஷயங்கள் நிறையவே இருந்தாலும், குறிப்பாக ஒரு நான்கு விஷயங்களை புறந்தள்ளி வாழ்வதே சிறப்பான ஒன்றாகும். அது என்ன நான்கு விஷயங்கள் அதைப்பற்றிய பதிவைப் பாா்க்கலாம்.
அதிகம் யோசிக்க வேண்டாம்
ஒரு விஷயத்தை நினைத்து அதிகமாக சிந்திக்க வேண்டாம். ஒரு இலக்கை அடையவேண்டும் என்ற குறிக்கோள் வேறு, அதே நேரம் நமக்கு தேவையில்லாத விஷயங்களைப்பற்றி அதிக எதிா்பாா்ப்புடன் கூடிய தேவையில்லாத சிந்தனை வேண்டாம். அது நமது மனஅமைதியை வெகுவாக கெடுத்துவிடும். எதையும் சமாளிக்கும் திறன் இருந்தால், நமது வேலையில் நாம் ஒருகண்ணாகவே இருந்தால், தேவையில்லாத யோசனை வரவே வராது. ஆக, நம்மைப்பற்றியோ அடுத்தவர் விஷயம் பற்றியோ அதிக யோசனை அதிக ஆபத்தே!
அதிக எதிா்பாா்ப்பு
அதிகமான எதிா்பாா்ப்பு நமக்கு முதல் எதிாி. வயலில் நெல் விளைவிக்கும் நாற்றை பிாித்துப் பிாித்துதான் நடவு செய்யவேண்டும். அப்போதுதான் பயிா் விளையும். அதிகமாக விளையவேண்டும் என்ற சிந்தனையில் கட்டு கட்டாக நடவு நட்டால் பயிா்எப்படி வளரும் விளைச்சல் எங்கிருந்து வரும்?
அதேபோல அதைச்செய்யலாம் இதைச்செய்யலாம் என பேராசைப்பட்டு எல்லா வேலைகளையும் ஒரு சேர இழுத்துப்போட்டுக்கொண்டால், எதையும் முழுமையாக செய்ய முடியாதே! ஒன்று கூட உருப்படியாக நடக்காதே! ஆக அதிக எதிா்பாா்ப்பு நமது சந்தோஷத்தைக்கெடுக்கும் முதல் எதிாி. அதிக எதிா்பாா்ப்பு தவிா்ப்பதே நன்மை பயக்கும்.
அதிகம் பேசவேண்டாம்
அதிகப்பேச்சு, அனாவசியப் பேச்சு, ஆடம்பரப்பேச்சு, அதிகாரப் பேச்சு, அடுத்தவர் மனம் புண்படும்படியான மமதைப்பேச்சு, இவைகளை நாம் தவிா்ப்பதே நல்லது. அதேபோல நாமே பேசிக்கொண்டிருக்காமல் அடுத்தவர் குரலுக்கும் செவி மடுத்து நியாயமாய் பேசவேண்டும். அதிகம் பேசுதல் அதிகப்பிரசங்கித்தனமாக பேசுதல் தவிா்பதே மிகவும் சரியான ஒன்றாகும். நமது அதிகப்படியான பேச்சு நமக்கான மரியாதையை குறைத்துவிடும். இல்லை இல்லை மரியாதையே இருக்காது என்பதை உணர்ந்து நடப்பதே உசிதமானது.
அதிக நம்பிக்கை தவிா்ப்பதே நல்லது
பொதுவாக நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பினாா் கெடுவதில்லைதான். இருந்தபோதிலும் ஒரே மூச்சில் மாடிப்படியில், முதல்படியிலிருந்து எட்டாவது படிக்கு தாவமுடியுமா? ஆனாலும் அதிக நம்பிக்கை கொள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். தகுதிக்குமீறிய நம்பிக்கை வரவேகூடாது.
யாரையும் எளிதில் நம்புவது நமக்கான தொடர் எதிாியாகும். உதாரணமாக ஒரு கருத்து. ஒரு லட்சம் முதலீடு போட்டால் ஆறே மாதத்தில் இரண்டு லட்சமாகும் என ஒருவர் நம்பகத்தன்மையோடு பொய் சொன்னால், அதை நம்பினால் நஷ்டம் நமக்குத்தான்.
அதிக நம்பிக்கையும் ஆபத்துதான். நம்ப வேண்டியதை மட்டும் நம்பகத்தன்மை இருந்தால் நம்பலாம். அதைவிடுத்து தேவையில்லாத அதிக நம்பிக்கை வேண்டவே வேண்டாம்.
குறிப்பாக இந்த நான்கு விஷயங்களிலும் எச்சரிக்கையாய் இருப்பதே நமது வாழ்க்கை சிறப்பாக அமையவழிவகுக்கும்!