

வாழ்க்கையில் காலம் நம்மை எப்படி வேணும்னாலும் சித்தரிக்கும். ஆமாம், வருங்காலங்களில் இவன் நல்லா வருவான். இவனுக்கு இப்ப கால நேரம் சரியில்லை. இவன் ஆடர ஆட்டத்தைப் பார்த்தா, இவனை இந்த காலம் என்னப்பாடு படுத்த போகவுதோ, காலம் அவன் செய்த ஏமாற்றத்திற்கு தக்க தண்டனை கொடுக்கும் இப்படி எல்லாம் சில வசனங்கள் காலத்தைப் பற்றி நம்மிடையே பேசுவது உண்டு.
இப்படி பேசுவதற்கு காரணம், அந்த அந்த சூழ்நிலைதான். ஆகவே நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படியே காலம் நம்மை அழைத்துச் செல்வதுதான் உண்மை. நல்ல காலம், கெட்டக் காலம் என்று ஏதும் இல்லை. நம்முடைய உழைப்பே சிறந்த காலம். அது இல்லையேல் எந்த காலமும் நம்மை உயர்த்தி விட்டுச்செல்லாது.
வாழ்க்கையில் தன் சூழ்நிலை அறிந்த மனிதன்தான், நிகழ் காலத்திற்கு தகுந்தவாறு தன்னைப் பக்குவமான வாழ்க்கையை தனதாக்கிக் கொள்கிறான். காலம் எதையும் மறக்கடிப்பதில்லை… ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மட்டுமே தருகிறது. ஆகையால் வாழ்க்கைக்கு புரிதல் மிகவும் அவசியம்.
வாழ்க்கையில் கவலைகள் எல்லாம் காலம் தந்த பரிசு அல்ல. அவைகள் அனைத்தும் நம் விரலில் வளரும் நகம் போன்றது. அதிகம் ஆகும் போது அதனை வெட்டி விடுவதுபோல், அதனை மனதில் அகற்றிவிட்டு, கடந்து செல்லவேண்டும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கவலைகளை நினைத்து கொண்டு இருந்தால், அதுவே நோய்க்கு விருந்தாகும். கலங்காத மனதிடம்தான் இதற்கு மருந்தாகும். ஆகவே மனஉறுதியோடு இருப்போம். எதையும் சமாளிக்கும் திறன் படைத்தது வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ரோபோக்கள் போன்று இல்லையே. உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். சக மனிதர்களை வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்று பேச வேண்டாம். பக்குவமாகப் பழக கற்றுக்கொள்வோம். ஏனெனில், மனிதனுக்கு மனிதன் தக்க நேரத்தில் உதவும் தருணமே காலம் தந்த பரிசு.
வாழ்க்கையில் தயக்கம் என்ற சொல்லை தனக்குள் சிறைப்படுத்திக் கொண்டால், அதில் வெளிப்படுவது குறைகள் மட்டுமே. அந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமேயன்றி, நினைத்து வேதனைப்பட்டால், காலம் நம்மை கடத்திச் சிறைப்படுத்தி விடும். காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் கற்றறிந்த மாணவர்களைத் தான் எதிர்காலம் இருகரஙகள் பற்றிக் கொண்டு, அவர்கள் முன்னேறும் வாழ்க்கையோடு பயணிக்கிறது. இதைத் தான் 'இளைமையில் கல்' என்று பழமொழி சொல்கிறது.
வாழ்க்கையில் காலத்தையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்தும் போதுதான், சாதனைக் கதவுகள் திறக்கும்.
காலத்தை விரயமாக்கி சோம்பல் நிறைந்து வாழ்பவர்களால், வாழ்வில் எதனையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதனால் பொது வாழ்வில் மன அழுத்தம் மற்றும் தேவையற்ற கவலைகளும் களையாக முளைத்து, சுளையாக நம் வாழும் காலத்தை பறித்துவிடும்.
வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் எந்த செயலையும் காலம் அறிந்து செயலாற்றுவோம். அதுதான் நமக்கு நல்ல காலமாக அமையும். ஆகவே, காலத்தினை, அதனோடு பயணித்து நம் வாழ்க்கையை செதுக்கி உயர்ந்து நிற்ப்போம்!