வேண்டியதற்கு கவனம் செலுத்த வேண்டாதது தானாகவே விலகிவிடும்!

Pay attention to what is needed
Lifestyle stories
Published on

வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே வேண்டாதது அதுவாக தானாகவே விலகிவிடும். கஷ்டப்பட்டு கவனிப்பதை விட இஷ்டப்பட்டு கவனிப்பது நல்ல பலனை தரும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் நமக்கு மிகவும் பிடித்தவை என்று மனதால் நினைத்துக் கொண்டாலே கவனம் தானாகவே வந்து விடும். மூளையின் முக்கிய செயல்பாடுகளில் கவனமும் ஒன்று. இரண்டு அல்லது மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தும்போது நமக்கு வேண்டியவற்றில் இருக்க வேண்டிய கவனம் சிதறுகிறது.

உதாரணமாக கார் ஓட்டும்போது கைப்பேசியில் பேச ஆரம்பித்தால் கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும். அதேபோல்தான் மாணவர்கள் வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியரின் பேச்சை கவனம் சிதறாமல் கேட்பதற்கு ஆர்வமும், கவனிப்பு திறனும் வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று விஷயங்களை கவனிப்பதற்கு பயிற்சி தேவை. வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே வேண்டாதது தானாகவே விலகி விடும்.

ஒன்றின் மேல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் கவனம் தானாக வரும். தேவையை ஏற்படுத்திக் கொண்டால்  எண்ணம் அதைச் சுற்றியே இருக்கும். கவனத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? முதலில் கவனத்தை கெடுக்கும் விஷயங்களை குறித்துக்கொண்டு அவற்றிலிருந்து விலக முயற்சிக்கலாம். மூச்சுப் பயிற்சி பழகுவதுடன், மன இறுக்கத்தை தளர்த்த உடற்பயிற்சியும் செய்ய கவன சிதறலை கட்டுப்படுத்தலாம். டிஜிட்டல் சாதனங்கள் கவனச் சிதறலை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. போனில் நோட்டிபிகேஷனை மூடி வைப்பதும், தேவையில்லாத ப்ரவுசர் டேப்களை மூடுவதும் குறிப்பிட்ட செயலில் கவனம் செலுத்த உதவும்.

வேலைகளுக்கு நடுவே இடைவேளை எடுப்பது நம் கவனத்தை அதிகப்படுத்தும். நம் மூளை புத்துணர்ச்சி பெற ஓய்வு தேவை. நம்முடைய பணி திட்டத்தில் இடைவேளைக்கும் நேரம் ஒதுக்கி விடுவது நம் செயல்களை சிறப்பாக செய்ய உதவும். பணிகளுக்கு இடையே சிறிது எழுந்து காலாற நடப்பது, ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, சிறிது உடல் வேலைகளில் ஈடுபடுவது போன்றவை நம் மனதை புத்துணர்ச்சி பெற வைப்பதுடன் செயல் திறனையும் மேம்படுத்த உதவும். நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான நேரங்களை ஒதுக்கி கவனம் தடைபடாத வகையில் நம் செயல்களை அமைத்துக் கொள்வது கவனச் சிதறல்களை தடுத்து விடும். வேண்டியதற்கு கவனம் செலுத்த வேண்டாதது தானாகவே விலகிவிடும்.

நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், திட்டமிடுதலும் மிகவும் அவசியம்.  அவசரமாக செய்ய வேண்டிய வேலைகளை முதலில் கண்டறிந்து முடிப்பதும், பணிச் சுமையை நிர்வகிக்க சிறிய பகுதிகளாக வேலைகளை பிரித்துக் கொண்டு  செய்வதும், ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துவதும் வேலைகள் சுலபமாக முடிய உதவும். பணி சுமையும் அதிகம் தெரியாது.

இதையும் படியுங்கள்:
வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா?
Pay attention to what is needed

தியானம் செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் நம் கவனத்தை மேம்படுத்த உதவும். தினசரி சில நிமிடங்கள் இந்த பயிற்சிகளை செய்வதால் மன அழுத்தம் குறைந்து வேலைகளில் கவனம் செலுத்த உதவும். ஊட்டச்சத்து மிக்க உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதுடன், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதும் நம் மூளையையும் ஆற்றலையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். அத்துடன் போதுமான ஆழ்ந்த  உறக்கம் நம் கவனம், நினைவாற்றல் போன்றவற்றிற்கு மிகவும் அவசியம்.

ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது சிறந்ததாக தோன்றினாலும் இவை பல நேரங்களில் நாம் செயல் திறனையும், கவனத்தையும் பாதிக்கும். எனவே ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்தி செயல்பட வேலை சிறப்பாக முடிவதுடன் மன அழுத்தம் குறைந்து உற்சாகத்துடன் இருக்கவும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com