

அமைதி. இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதில் ஒருவித நிம்மதி பிறப்பதை நாம் உணரலாம். அமைதி என்பது சலனமற்ற ஒரு நிலை என்றாலும் அது பெரும் சக்தி படைத்தது. நம் மனம் எப்போதும் அமைதியை நாடுவதிலேயே குறிக்கோளுடன் செயல்படும் தன்மை உடையது. நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கை அமைந்திருந்தாலும் அமைதி என்ற ஒன்று கிடைக்காவிட்டால் பெரும் கவலை உண்டாகிவிடும்.
நம் வாழ்வில் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படையாக அமைவது அதிகப்படியாக நாம் பேசும் பேச்சுக்களே. சிலர் எப்போதும் விளையாட்டாக பேசிக்கொண்டே இருப்பார்கள். அதை பலர் ரசித்தும் கேட்பார்கள். ஆனால் மனிதர்களின் மனநிலையானது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சில சமயங்களில் சிலர் பேசும் விளையாட்டான பேச்சானது பிறருடைய மனதை காயப்படுத்தி பிரச்னைகளை ஏற்படுத்தி விடுவதையும் நாம் காண நேரிடுகிறது.
“விருப்பு வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைத்து இருக்கும்” என்கிறார் புத்தர். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றும் சொல்கிறார். ஆசையுடைய மனமானது அலைபாயும் தன்மை கொண்டது. இதனால் அமைதி நம்மைவிட்டு எளிதில் விலகிவிடும்.
எப்போதும் வளவளவென்று பேசிக்கொண்டிருப்பவர் களுக்கு மதிப்பிருக்காது. அவன் அப்படித்தான் எதையாவது உளறிக்கொண்டே இருப்பான் என்பார்கள். அத்தகையவர்களின் வார்த்தைக்கும் மதிப்பிருக்காது. ஆனால் அமைதியாக உள்ளவர்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது தெரியாது. அவர்கள் ஒரு வார்த்தை பேசினால்கூட அது அர்த்தமுள்ளதாக இருக்கும். வீரியம் உள்ளதாகவும் இருக்கும்.
அமைதி என்பது ஒரு வாழ்க்கை வழி. அது எல்லோருக்கும் கை வராது. அமைதியாக இருப்பது என்பது அவ்வளவு சுலபமும் அல்ல. அது கைவர வேண்டுமானால் பெரும் முயற்சி செய்யவேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் மௌனவிரதத்தைக் கடைப் பிடியுங்கள். இது உங்களுக்கு அமைதியை அறிமுகப் படுத்தும். அமைதியின் வலிமையை கற்பிக்கும். இதன் மூலம் அமைதி உங்களுக்கு எளிதில் கைகூடும்.
அமைதியாக இருப்பதால் பல நன்மைகள் உண்டு. பிரச்னைகளைக் கண்டு பயப்படாத மனம் உங்களுக்குக் கிடைக்கும். அத்தகைய மனம் கிடைத்துவிட்டால் எந்த ஒரு பிரச்னைக்கும் எளிய முறையில் தீர்வுகாண முடியும்.
அமைதி பல பிரச்னைகளை நம்மிடம் வரவிடாமல் தடுக்கும் ஒரு பேராயுதம் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொண்டால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து நிற்கும்.
பல வியாதிகளுக்கும் மூல காரணமாக அமைவது டென்ஷன் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. டென்ஷன் பல உறவுகளை இழக்கக் காரணமான இருக்கிறது. அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வியாதிகள் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். அமைதி ஆரோக்கியம் என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமைதி ஆரோக்கிய வாழ்வின் திறவுகோல்.
எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் டென்ஷனாகி உடனே தீர்வு கண்டாக வேண்டும் என்று துடிக்காமல் அமைதிகாக்கப் பழகுங்கள். அமைதி உங்கள் மனதில் பல நல்ல வழிகளை ஏற்படுத்தும். அதன் மூலம் எந்த ஒரு பிரச்சினைக்கும் எளிதில் தீர்வு காணலாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கப் பழகுங்கள். அது மகிழ்ச்சியான வாழ்க்கையின் பாதைக்கு உங்களை கைபிடித்து அழைத்துச் செல்லும்.