
சில நேரங்களில் வாதிடும்போது ஒருவர் அறிவுபூர்வமான கருத்துக்களை முன் வைப்பதுண்டு. அடுத்தவர் உணர்வுபூர்வமான கருத்துக்களை முன்வைப்பார். விவாதிப்பதற்கு இது மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனைகளை அள்ளித்தரும் கருத்தாக அமையும்.
ஆனால் ஒரு பட்டிமன்றமோ விவாத மேடையோ வைத்து பேசும் போது அதற்கு முடிவு சொல்வதற்கு நடுவர் கையில் போகும்போது அறிவுப்பூர்வமாக ஒருவர் எவ்வாறு வாதிட்டு இருந்தாலும் உணர்வுபூர்வமாக சொல்லப்படும் கருத்துகள்தான் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். ஆதலால் அந்த உணர்வு பூர்வமான பேச்சுக்குத்தான் வெற்றி கிடைக்கும் .அதுபோல உணர்வும், அறிவும் வாதிட்டபோது என்ன ஏற்பட்டது என்பதை நாமும் காண்போம்!
தாமஸ் ஜாய்சன் என்பவர் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற இளம் நாவலாசிரியர். சாமானிய மக்களின் மன உணர்ச்சிகளை அற்புதமாக படம் பிடித்து காட்டுபவர் என்ற பெயர் அவருக்கு உண்டு.
ஒரு தடவை பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜிம் மார்வல் என்ற விஞ்ஞானி உலகத்திலேயே உயர்ந்த நிலையில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் விஞ்ஞானிகள்தான். கதாசிரியர்கள் போன்றவர்கள் மக்கள் மயங்கும்படி அவர்கள் அறிவைக் குழப்புகிறார்கள் என்றார்.
அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்த தாமஸ் ஜாய்சன் விஞ்ஞானிகளை விட கதாசிரியர்கள்தான் அதிக அறிவு உள்ளவர்கள் என்று எதிர்க் குரல் கொடுத்தார்.
உடனே ஜிம் மார்வெல் கோபத்துடன் 'விஞ்ஞானிகளை விட கதாசிரியர்கள் எந்த விதத்தில் அதிக அறிவு படைத்தவர்கள்” ஓர் உதாரணம் கூறுங்களேன் என்றார்.
"விஞ்ஞானிக்குப் புற உலகில் கண்களுக்கு தெரியும் பசிபிக் கடல், இந்துமக்கடல், கருங்கடல், செங்கடல் போன்றவைதான் தெரியும். ஒரு கதாசிரியனோ மனித உள்ளங்களில் மறைந்து கிடக்கும் இன்பக் கடல், துன்பக்கடல், கண்ணீர்க் கடல் போன்ற பல கடல்களை அறிவான்", என்றார் தாமஸ் ஜாய்சன்.
"ஆண்டவன் படைப்பில் மனித மனம் என்பது ஒரு அருமையான, அற்புதமான விஷயம். எந்த ஒரு எண்ணத்தையும் உள்வாங்கிக் கொண்டு சரியான நேரத்தில் அதை செயல்படுத்த கூடிய அபூர்வ சக்தி அதற்கு உண்டு என்கிறார்"- சுவாமி தயானந்த சரஸ்வதி.
ஆதலால் பிறர் கூறும் கருத்துகளை பொறுமையாக கேட்டதும், தனது கருத்துகளை தெளிவாகவும், பிறரின் மனம் புண்படாமலும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். அதுதான் மனித உணர்வுகளை மதித்து போற்ற வேண்டிய செயலாகிறது.
வளரும் பிறைகளே!
நீங்கள் தாமஸ் ஜாய்சனா?
ஜிம் மார்வாலா?