

வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நாம் மலையைத் தூக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் ஒரு கடுகளவு மாற்றமே போதும். தினமும் 1% செய்யும் முயற்சியே போதும் என்கிறது ஜேம்ஸ் கிளியர் எழுதிய "Atomic Habits" புத்தகம்.
அணு அளவு பழக்கங்கள்; 1% மாற்றத்தின் அசாத்திய வலிமை!
வெற்றி என்பது ஒருமுறை செய்யும் செயலால் கிடைப்பதல்ல, அது தினமும் நாம் செய்யும் சிறு சிறு பழக்கங்களின் வெளிப்பாடு. ஒரே நாளில் பெரிய ஆளாகவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், நிஜமான வெற்றி என்பது நம் கண்களுக்குத் தெரியாத மிகச்சிறிய மாற்றங்களில் ஒளிந்திருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்தலாம்?
இதோ 5 வழிகள்:
1. 1% விதி:
தினமும் உங்களை நீங்கள் 1% மட்டும் செதுக்கிக்கொண்டால் போதும். இது முக்கியமில்லாதது போலத்தெரியலாம். ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தால், தினமும் 1% முன்னேறினால், ஒரு வருடத்தின் முடிவில் நீங்கள் இப்போது இருப்பதைவிட 37 மடங்கு சிறந்த மனிதராக மாறியிருப்பீர்கள்!
உதாரணமாக இன்று முதல் 5 மணிநேரம் படிக்கவேண்டும் என்று இலக்கு வைக்காதீர்கள். இன்று வெறும் 5 நிமிடம் மட்டும் படியுங்கள். ஆனால் அதைத் தவறாமல் செய்யுங்கள். அந்தச் சிறு முன்னேற்றம் 'கூட்டு வட்டி' போல வளர்ந்து, சில மாதங்களில் உங்களை ஒரு அறிஞராக மாற்றும்.
2. இலக்குகளைவிட வழிமுறைகளே முக்கியம்:
வெற்றி பெற்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் ஒரே இலக்குதான் (உதாரணமாக: போட்டியில் ஜெயிக்க வேண்டும்) என்று இருக்கும். பிறகு ஏன் ஒருவன் மட்டும் ஜெயிக்கிறான்? ஏனென்றால் அவன் இலக்கைவிட, அதை அடையும் வழிமுறையில் கவனம் செலுத்துகிறான்.
‘நான் 10 கிலோ எடையைக் குறைக்கவேண்டும்’ என்பது இலக்கு. தினமும் ஆரோக்கியமாகச் சாப்பிடுவது மற்றும் நடைப்பயிற்சி செய்வது என்பது வழிமுறை. இலக்கைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு தினசரி வழிமுறையைச் சரியாகச் செய்யுங்கள். இலக்கு தானாகவே உங்களைத் தேடிவரும்.
3. நம்பிக்கையும், செயல்பாடும்:
நீங்கள் ஒரு புத்தகத்தை எழுத விரும்பினால், ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்று உங்களை நீங்களே நம்புங்கள். ஒரு எழுத்தாளன் தினமும் என்ன செய்வான்? எழுதுவான். உங்கள் செயல் உங்கள் அடையாளத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ‘நான் இதைச் செய்யப் போகிறேன்" என சொல்வதற்குப் பதில் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
4. புதிய பழக்கம்:
புதிய பழக்கத்தை உருவாக்குவது கஷ்டம். ஆனால் ஏற்கனவே இருக்கும் ஒரு பழக்கத்தோடு புதிய பழக்கத்தைச் சேர்த்தால் அது எளிதாகிவிடும்.
காலையில் காபி குடித்த பிறகு (பழைய பழக்கம்), நான் 1 நிமிடம் தியானம் செய்வேன் (புதிய பழக்கம்). இதுபோல தூங்குவதற்கு முன்னால், நான் ஒரு பக்கம் புத்தகம் வாசிப்பேன். இப்படிச் செய்வதால் உங்கள் மூளை புதுப் பழக்கத்தை மிக வேகமாக ஏற்றுக்கொள்ளும்.
5. சூழ்நிலையை மாற்றுங்கள்:
நமது பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றன. ஜிம்முக்குச் செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், முதல் நாள் இரவே ஜிம் ஆடைகளையும், ஷூவையும் உங்கள் கண்ணில் படும்படி எடுத்துவையுங்கள். நல்ல பழக்கங்களைச் செய்வதற்குத் தேவையான பொருட்களை உங்கள் கண்களுக்குத் தெரியும்படி வையுங்கள். அதேபோல, கெட்ட பழக்கங்களைத் தூண்டும் பொருட்களைக் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வையுங்கள்.
ஒரு அணு (Atom) எவ்வளவு சிறியதோ, அதேபோல்தான் ஒரு பழக்கமும். ஆனால் பல அணுக்கள் சேரும்போதுதான் ஒரு பெரிய உலகம் உருவாகிறது. உங்கள் 1% மாற்றங்கள் இன்று யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல, அந்தச் சிறு பழக்கங்களே உங்களை ஒரு மாபெரும் வெற்றியாளராக உலகிற்கு அடையாளம் காட்டும்.