
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது என்பது ஒரு சொல்லாடலாகும். இதன் பொருள் ஒரு சூழ்நிலையை விட்டு வெளியேற விரும்பும் ஆசை அல்லது ஒரு நிலையிலிருந்து முன்னேறத் துடிக்கும் நிலையாகும்.
இது ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் அசௌகரியம், கட்டுப்பாடுகள் அல்லது ஏமாற்றம் காரணமாக உண்டாகலாம். மேலும் அவர்கள் அதை விட்டு வெளியேறி ஒரு புதிய, சிறந்த நிலைக்குச் செல்ல விரும்புவது போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறது.
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது மனிதனின் இயல்பான குணமாகும். சில நேரங்களில் தற்போதைய நிலைமை திருப்திகரமாக இல்லையெனில், அதை விட்டு வேறு ஏதாவது ஒரு நல்ல நிலையை அடைய ஆசைப்படுவது இயல்பானதுதான்.
அனைவருமே நம்முடைய வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை அடைய கனவு காண்கிறோம். அது தொழில் ரீதியான இலக்காக இருக்கலாம்; இல்லையெனில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.
வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என்று சில நேரங்களில் சிலர் தங்களுடைய தற்போதைய நிலைமை திருப்திகரமாக இல்லையென்றால், அதை விட்டு வேறு ஏதாவது ஒரு நல்ல நிலையை அடைய ஆசைப்படுவது இயல்பானதுதான். இது ஒரு முன்னேற்றத்திற்கான முயற்சியாக இருக்கலாம். சிலர் புதிய அனுபவத்தை தேடுவதற்காக இருக்கின்ற நிலையை விட்டு வேறு ஒரு புதுமையான அல்லது சுவாரசியமான விஷயத்தை முயற்சி செய்ய ஆசைப்படுவார்கள். எனவே இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லை.
எல்லோருக்கும் ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடுவதில்லை. ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்க்கை ரசிக்கும்படியாக இருப்பதுமில்லை. அதற்காக முயற்சி எடுக்காமல் இருப்பது சரியாகுமா? வாழ்க்கை என்பது சில பேருக்கு விளையாட்டாக இருக்கலாம்.
சிலருக்கோ சாதனை புரியவேண்டும் என்ற வெறியாக இருக்கலாம். நான்கு பேர் கைதட்டி பாராட்டும் விதமாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று சிலர் எண்ணலாம். புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி நான்கு பேருக்கு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற எண்ணமிருக்கலாம்.
சாதிக்கவேண்டும், ஜெயிக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி புறப்பட்ட அம்பாக மாறுகிற பொழுது இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை.
ஆசைப்பட்டதை அடைய முயற்சிப்பதும், அதை அடைய முடியவில்லை என்பதற்காக வாழ்க்கையின் மீது வெறுப்படைவதும்தான் தவறு. அது மாதிரியான சமயங்களில் ஆசைப்படுவதை குறைத்துக் கொண்டு எதார்த்த வாழ்வினை ஏற்று வாழ பழகிக்கொள்ள பழகவேண்டும்.
நினைப்பவை எல்லாம் நடக்கவேண்டும் என்று முயற்சி செய்யலாம். அதனை அடையவும் ஆசைப்படலாம். ஆனால் அது நடக்காத பொழுது நம்மிடம் இருப்பவற்றைக் கொண்டு நிறைவாக, மகிழ்வாக வாழப் பழக வேண்டும். அதுதான் சிறந்தது.