சரியான உழைப்பும், சிறந்த திட்டமிடலுமே நிரந்தர வெற்றி!

Proper work and good planning
Motivational articles
Published on

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு அனைவரும் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருசிலர் மட்டுமே மிகச்சிறந்த வெற்றியைப்பெற முடிகிறது. வெற்றியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும், சிலர் வெற்றியின் சிகரத்தைத் தொடமுடியாமல் ஏமாற்றத்தை நெஞ்சில் நிரப்பி வருந்துகிறார்கள்.

இதற்குக் காரணம் "வெற்றிபெற வேண்டும்" என முயற்சி செய்யும்போது அந்த முயற்சிக்கு பக்க பலமாக இருக்கின்ற மனிதர்களைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். அந்த வெற்றியைப் பெறுவதற்கு செய்யவேண்டிய அவசியமான செயல்களையும் (ImportantActivities), அவசரமான செயல்களையும் (Urgent Activities) பட்டியலிட்டு முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். எந்தெந்த செயல்களெல்லாம் மிக முக்கியமான செயல்கள்? என்று அடையாளம் கண்ட பின்பு, அந்த செயல்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு திட்டமிட வேண்டும்.

திட்டமிடுவதிலும், உழைப்பதிலும்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

சரியான உழைப்பு இல்லாமல் எந்த வெற்றியும் கிடைப்பதில்லை-என்பது ஜேம்ஸ் ஆலன் என்னும் அறிஞரின் கருத்தாகும். இதைப்போலவே, ஜவஹர்லால் நேரு துணிச்சலாக உழைப்பவர்களுக்கு மட்டும்தான் வெற்றி அருகில் வந்து அமருகிறது. பயப்படுகிறவர்களை அது திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்று குறிப்பிடுகிறார்.

முறைப்படுத்தப்பட்ட உழைப்பும், சிறந்த திட்டமிடலும்தான் ஒருவரின் வெற்றியை அலங்கரிக்கின்றது என்பதை இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம். திட்டமிடும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு தெளிவான முடிவை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும். காலங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட செயல்களுக்கு மட்டுமே "முன்னுரிமை" (Priority) கொடுத்து செயல்பட வேண்டும். ஏனென்றால், இளம்பருவத்தில் கற்றுக்கொண்ட கல்விதான், ஒருவருக்கு பின்னாளில் வாழ்க்கை முழுவதும் துணையாய் அமைகிறது.

இதையும் படியுங்கள்:
அதிகாலை எழுதல்: வெற்றியின் முதல்படி!
Proper work and good planning

கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் காலத்தில் நல்ல புத்தகங்களை வாசிப்பது, அன்றாடம் பாடங்களை தொடர்ந்து படிப்பது, கல்வி சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பது, தேர்வுக்கு முறையாக தயார் செய்வது. கவனம் சிதறாமல் நாள்தோறும் பாடங்களை திரும்பத்திரும்ப படித்து நினைவில் நிறுத்துவது, படித்ததை எழுதிப் பார்ப்பது, எழுதிய பாடங்களை சரிபார்த்து மீண்டும் எழுதி பயிற்சி மேற்கொள்வது போன்றவைகளெல்லாம் படிப்பு சம்பந்தப்பட்ட முக்கிய செயல்களாக அமைகிறது.

இவை தவிர- ஓய்வு நேரங்களில் நண்பர்களோடு படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடுவது மனதுக்கு இனிமை சேர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, நாள்தோறும் செய்தித்தாள்கள் படிப்பது, நூலகங்களுக்குச் செல்வது போன்றவைகளையும் முக்கிய செயல்களாக வைத்துக்கொண்டால் பயிலும் காலத்திலேயே வெற்றிகள் பெறுவது எளிதாகிவிடும்.

"எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?" என்பதை முறையாகத் தெரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிறந்த வெற்றிகளைப் பெற்று வாழ்கிறார்கள்.

"ஒவ்வொரு மனிதரும் தன்னை வெற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வெற்றியாகும். ஒவ்வொரு நிமிடமும் நல்ல நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்தால் வெற்றி தானாக கிட்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் உருவாகும்" என்ற மாவீரன் நெப்போலியன் வார்த்தைகளை நம் நெஞ்சில் நிறுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com