
அன்பை வெளிப்படுத்துவது என்பது பல வழிகளில் செய்யலாம். உடல் ரீதியிலான பாசம், வார்த்தைகள் மூலம், செயல்கள் மூலம், நேரத்தை செலவிடுவதன் மூலம், சரியான வார்த்தைகளை பயன் படுத்துதல், உண்மைத் தன்மையுடன் இருத்தல் இதுவே அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
ஒரு வேட்டைக்காரன் தினமும் காட்டுக்குச் சென்று பறவைகளை வேட்டையாடுவான். அவற்றை எடுத்து வந்து ஊருக்குள் விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.
சில நாட்கள் நிறைய பறவைகள் சிக்கும். சில நாட்களில் ஒன்று கூட கிடைக்காது.
ஒருநாள் காட்டுக்கு போனபோது ஒரு துறவியைப் பார்த்தான்.
அவரது கைகளிலும், தோளிலும் சில பறவைகள் அமர்ந்திருந்தன.
அவர் அதனிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுவதைப் புரிந்து கொண்டதைப்போல அவரைப் பார்த்தன.
இதைப் பார்த்த வேட்டைக்காரன் ஆச்சரியத்துடன் , இப்படி பறவைகள் நெருக்கம் காட்டி இருக்கின்றன? இது எப்படி? நாமும் கற்றுக் கொண்டால் பறவைகளை உயிருடன் பிடித்து விற்கலாமே? உயிருள்ள பறவைகைளை விற்றால் அதிக விலைக்கு விற்கலாமே? என்று நினைத்தான்.
உடனே, துறவியிடம் சென்றதும், பறவைகள் பறந்துவிட்டன.
துறவியை வணங்கி, என்னைப் பார்த்ததும் பறவைகள் ஓடுகின்றன.
ஆனால், உங்களிடம் எப்படி நெருக்கமாக விளையாடுகின்றன? இது எப்படி சாத்தியம்? எனக் கேட்டான்.
"நான் அவற்றின் மீது உண்மையான அன்பு செலுத்துகிறேன் என் மனதில் இருக்கும் அன்பை உணர்ந்துகொண்டு அவை நெருங்கி வருகின்றன" என்றார் துறவி.
"நானும் உண்மையான அன்பு செலுத்தினால் பறவைகள், என்னிடம் வருமா? என்று கேட்டான். வேட்டைக்காரன்.
'நிச்சயம் வரும்,என்றார் துறவி.
அடுத்த நாள் பறவைகளை உயிருடன் பிடிக்க கூண்டுகளுடன் காட்டுக்குள் வந்தவன் அவற்றை மறைத்து வைத்தான். பறவைகளுக்கு பிடித்தமானவற்றை பழம், காய்கள் அருகில் வைத்து காத்திருந்தான்.
ஆனாலும் பறவைகள் அருகில் வரவில்லை. ஏமாற்றத்துடன் துறவியிடம், சென்று, ஏன் ? என்னிடம் பறவைகள் வரவில்லை? என்றான்.
"உன் அன்பு உண்மையானதாக இருந்திருக்காது" என்றார் துறவி.
மறுநாள் அவன் மீண்டும் காட்டுக்கு வந்தான். இப்போது அவனுக்கு வேட்டையாடும் எண்ணம் வரவில்லை. உண்மையான அன்புடன் பறவைகளின் செயல்களை ரசித்தான். அவற்றுடன் பேசினான். இம்முறை அவனுடன் பறவைகள் நெருங்கி அவனுடன் விளையாடத் தொடங்கின. பறவைகள் ஒரு குழந்தைபோல மாறியிருந்த அவனுக்கு வேட்டையாடும் எண்ணமே வரவில்லை.
மனதில் இருந்த உண்மையான அன்பை வெளிப் படுத்தினால் யாரும் நெருங்கி வருவார்கள். மனதில் இருந்து உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்! அனைவரும் உங்களை நெருங்கி வருவார்கள் நம்பிக்கையான உறவுகள் மலரும். அன்பை பரப்புங்கள் அனைவரிடம்.