

இன்றைய போட்டிகள் மிகுந்த காலகட்டத்தில் எந்த வகை தொழிலிலோ அல்லது பணியோ அவ்வளவு சுலபமானது இல்லை என்பது பெரும்பாலானோர் அறிந்த ஒன்றாகும்.
அப்படி இருக்கையில் வழி நடத்தும் தலைவருக்கு பொறுப்புகளும், பணி சுமையும் அதிகரித்து வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
தலைவர் (Leader) தனி வழியில் பயணம் செய்து முடிவுகள் மூலம் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் நடைமுறையில் நடப்பவைகளும் சுட்டிக்காட்டுக்கின்றன.
தலைவருக்கு இன்றைய மாறிவரும் சூழ்நிலையயில் தேவையான சில அம்சங்கள்.
தன்னையும், தன் திறமையையும் முழுமையாக நம்பவேண்டும். அறிவு (knowledge) மேம்படுத்த உரிய கவனம் அத்தியாவசியம். தவிர்க்கவே கூடாது.
முழுமையான திறன், அறிவு உள்ள தலைவர்களுக்கு கிட்டும் மரியாதையே அலாதியானது.
தலைவர் தன்னிடம் பணிபுரிபவர்களின் குணங்கள், வேலை செய்யும் திறமை, பழகும் விதம், அவர்களது வலிமை (strength) இயலாமை (limitation) போன்ற இயல்பான குணநலங்களை அறிந்து, தெரிந்து, புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் பணிபுரிபவர்களின் வலிமையுள்ள தனிப் பட்ட திறமைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்திக்கொள்ள தேவையான உதவிகளை தானே முன் வந்து செய்து ஊக்குவிக்க வேண்டும்.
நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவிய, உதவும் பணி புரிபவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பிற்கு அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் மனதார பாராட்டி உரிய சன்மானம் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் தருணத்தில் ஏற்ற, தாழ்வுகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையயாக செயல்பட வேண்டும். (to act without un biased manner )
பணிபுரிபவர்கள் தவறுகள் செய்தாலோ, பிரச்னைகளை எதிர்கொண்டு நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் பொழுதோ அவர்களை தனியாக அழைத்து உரையாட வேண்டும். அந்த தருணத்தில் கோபப்படாமலும், அனாவசிய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது விவேகம் மிக்க லீடரின் தேவை மற்றும் கடமை.
அத்தகைய டென்ஷன் மிக்க அழுத்தமான. சூழ்நிலையில் இருக்கும் குறிப்பிட்ட பணியாளருக்கு அவரது தலைவர் (Leader) மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டியது முக்கியம். அதைவிட அவசியம் அந்த தலைவர் அத்தகைய நம்பிக்கைக்கு உரியவர், பாத்திரமானவர் என்ற சூழ் நிலையை இயல்பாக உருவாக்க வேண்டியது நிறுவனம் முன்னேறவேண்டும் என்று எண்ணும் தலைவரின் கடமை.
அப்பணியாளரின் தரப்பு விவரங்களை பொறுமையாகவும் , நிதானமாகவும் கேட்டு அறிந்து அலசி ஆராயந்து அடுத்தகட்ட நடவடிகைகள் குறித்து யோசித்து பொருத்தமான தீர்வு கண்டால், அந்த குறிப்பிட்ட பணியாளர் மட்டும் அல்லாமல் மற்ற பணி புரிபவர்களுக்கும் தனிப்பட்ட மரியாதை அந்த தலைவரின் மீது அதிகரிக்கும். நம்பிக்கையும் கூடும்.
தலைவர் நடைபெறப் போவதை கூடும் மட்டும் அனுபவத்தின் அடிப்படையில் முன் கூட்டியே கணித்து ( to anticipate the possible developments / changes ) அதற்கு ஏற்ற மாதிரி தேவையானவற்றை மாற்றி செயல்பட்டால் போட்டியில் தொடர்வதுடன் இலக்கையும் அடைந்து பலன்களையும் பெறலாம்.
எனவே தலைவர் தனிப்பட்ட முறையில் இந்த குணங்களை கொள்வதுடன், நடைமுறைக்கு ஏற்ற பாதையில் பயணிக்க தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகின்றது.
அத்தகைய தொடர் புதுபித்தல் செயல் அறிவு மற்றும் திறனை அதிகரிக்க செய்வதுடன் தன்னம்பிக்கை என்ற உத்வேகத்தை கொடுத்து எந்த வகை சூழ்நிலையையும் மனோ திடத்துடன் சந்தித்து, கடந்து வலிமையுடன் செயல்பட வழி வகுக்கும்.