
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் முக்கியமான அம்சமாகும். சுய ஒழுக்கம் இருந்தால்தான் நம்மால் நேரத்தை சரியாக நிர்வகித்து முக்கியமான செயல்களை முன்னிறுத்தி செயலாற்ற முடியும். சுய ஒழுக்கம் இல்லாதவர்களை இந்த உலகம் ஒதுக்கிவிடும்.
சுய ஒழுக்கமும் வாழ்வில் ஒரு கட்டுப்பாடும் கொண்டிருந்தால்தான் தவறான வழிகளில் செல்லாமல் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கவும், அதன் வழியில் செல்லவும் முடியும். ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி அடைய தினமும் தொடர்ந்து முயற்சிக்க சுய ஒழுக்கம் என்பது மிகவும் இன்றிமையாதது.
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தால்தான் நாம் செய்யும் செயல்களில் நேர்மையை கடைபிடிக்க முடியும். இதனால் மற்றவர்களிடம் நம் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்கவும் முடியும். தினசரி பணிகளை திட்டமிடவும், கவனச்சிதறலின்றி செய்து முடிக்கவும் உதவும். இதற்கு நம்மை நாம் சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் அறிய முடியும்.
நம்மைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தானாகவே வந்துவிடும். 'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' - திருக்குறள். உயிரை விட மேலானது ஒழுக்கம். அத்தகைய ஒழுக்கத்தை கடைபிடித்தோமானால் சாதனைகள் பல நம்மைத் தேடி வரும்.
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தால் வாழ்க்கையில் சாதிப்பதற்கு குறுக்கு வழியை நாடமாட்டோம். நேர் வழியில் சென்று, நேர்மையை கடைப்பிடித்து சாதித்து காட்டுவோம். அப்படி சாதிக்கும் நேரத்திலும் சுயநலமாக சிந்திக்காமல் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக எதையும் செய்யவும் மாட்டோம். இலக்கை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் அந்த இலக்கை அடையும் வழி முறையையும் ஒழுக்கத்துடன் பின்பற்றுவோம். சுய கட்டுப்பாடு என்பது நம் ஆற்றலை ஒருமுகப்படுத்தி நல்ல நோக்கமுள்ள வழியில் செலுத்துவது.
நேர மேலாண்மை என்பது சுய ஒழுக்கத்திற்கு மிகவும் அவசியம். நம் நேரத்தை திறம்பட நிர்வகிப்பது மிகவும் முக்கியம். இதுவே நம் சுயஒழுக்கத்தை வளர்க்க உதவும். பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திறன் நம் வாழ்க்கைப் பாதையின் மீது சிறந்த கட்டுப்பாட்டோடு இயங்க உதவும்.
பணிகளுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது? அவசரம், முக்கியம், விருப்பத்தேர்வு என வகைப்படுத்தி அவசரப் பணிகளை முதலில் முடிப்பதும், முக்கியமான பணிகளை கால இலக்குகள் நிர்ணயித்து அதன்படி செயலாற்றவும் வேண்டும். விருப்பப் பணிகளை செய்வது நம்மை சிறப்பாக செயலாற்றுவதற்கு உந்துதலாக இருக்கும்.
சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடன் செயலாற்ற மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன ஆரோக்கியம் என்பது மனநலத்தைப் பேண வாழ்வில் எதிர்ப்படும் மன அழுத்தங்களை சரியான முறையில் நிர்வகிக்க தெரிந்து கொள்ள வேண்டும். மனநிறைவு பயிற்சிகள், போதுமான அளவு தூக்கம் ஆகியவை நம் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை.
அப்பொழுதுதான் மனம் சமநிலையுடன் இருக்கும். சுய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வளர்ப்பதற்கு கவனச்சிதறல்களை தவிர்ப்பதும், ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதும் மிகவும் அவசியம்.
சுய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்துவது என்பது ஒருமுறை மட்டுமே நடக்கும் விஷயமல்ல. அது ஒரு நீண்ட கால உறுதிப்பாடாகும். இதன் மூலம் நிலைத்தன்மையும், விடாமுயற்சியும் கொண்டு நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும். பின்னடைவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நம்மை வலிமையாகவும், மீள் தன்மையுடனும் மாற்றும் நுண்ணறிவைப் பெற முடியும்.